ஜப்பானிய களஞ்சியத்தில் புகுந்த மூவர் கைது

161 0

புதிய களனி பாலம் மற்றும் வெளிப்புற வளைய வீதி நிர்மாணப் பணிகளில் ஈடுபடும் ஜப்பானிய நிறுவனத்துக்கு சொந்தமான களஞ்சியசாலையில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் மூவரைக் கைதுசெய்துள்ளதாக   கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் பேலியகொட பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

புதிய களனி பாலம் மற்றும் வெளிப்புற வளைய வீதி அமைப்பதற்காக ஜப்பானில் இருந்து பொருட்கள் கொண்டு வரப்பட்ட களஞ்சியசாலை நேற்றிரவு உடைக்கப்பட்டு உபகரணங்கள் திருடப்பட்டன.

இதுதொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டையடுத்து, சிசிடிவி காட்சிகளைக் கொண்டு சம்பவத்துடன் தொடர்புடைய நபரை அடையாளம் கண்ட பொலிஸார், அவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் பேலியகொட பகுதியில் மேலும் இருவரை கைது செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து கிடைத்த தகவலின் படி, தொழில்துறை உபகரணங்களை வாடகைக்கு வழங்கும் பேலியகொடையில் உள்ள  கடையொன்றை சோதனையிட்ட போது, ​​பெரிய அளவிலான இரும்பு ஆணி இயந்திரங்கள், ஜெனரேட்டர்கள் உள்ளிட்ட மின்னணு உபகரணங்களை பொலிஸார் கைப்பற்றினர்.

இந்த உபகரணங்கள் நிர்மாணப்பணிகள் நிறைவடைந்தவுடன் ஜப்பானுக்கு திருப்பி அனுப்பப்பட இருந்தவை என்றும் இவற்றின் மதிப்பு கிட்டத்தட்ட 2 கோடி ரூபாய் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகத் தெரிவித்த கிராண்ட்பாஸ் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.