நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க 5 மணிக்கு மேல் கடைகள் அடைப்பு

224 0

டீக்கடைகளில் மாலை 5 மணிக்கு பிறகு பார்சல் சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தாலும் பெரும்பாலான டீக்கடைகள் மாலை 5 மணிக்கு பிறகு மூடப்பட்டு விட்டன.நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அத்தியாவசிய கடைகளான பால் மற்றும் மருந்து கடைகள் தவிர மளிகை கடைகள், காய்கறி கடைகள், பேக்கரி கடைகள் உள்ளிட்ட பிற கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும்.

உணவகங்கள் அனைத்திலும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே 50 சதவீத வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்த அனுமதிக்கப்படுகிறது. மாலை 5 முதல் இரவு 10 மணி வரை பார்சல் மட்டும் அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த புதிய கட்டுப்பாடுகள் அனைத்தும் நேற்று முதல் அமலுக்கு வந்தது.
இதையொட்டி நாமக்கல்லில் நேற்று பஸ்நிலையம், பிரதான சாலை, சேலம் சாலை, திருச்சி சாலை, திருச்செங்கோடு சாலை, சேந்தமங்கலம் சாலை, துறையூர் சாலை என அனைத்து பகுதிகளிலும் மாலை 5 மணிக்கு கடைகள் அடைக்கப்பட்டன. பஸ்நிலையத்தில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டதால் பஸ் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
ஓட்டல்களிலும் மாலை 5 மணிக்கு பிறகு பார்சல் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. டீக்கடைகளில் மாலை 5 மணிக்கு பிறகு பார்சல் சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தாலும் பெரும்பாலான டீக்கடைகள் மாலை 5 மணிக்கு பிறகு மூடப்பட்டு விட்டன. இதனால் மாலை 6 மணிக்கு பிறகு வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்தது.
மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை அனைத்து கடைக்காரர்களும் கடைபிடிக்கிறார்களா? என நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதேபோல் நேற்று மாலை 5 மணிக்கு பிறகு ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்திவேலூர் என அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டன.