இனப்படுகொலையும் சோனியாவும், காட்டிக் கொடுக்கும் ராஜபக்ச – புகழேந்தி தங்கராஜ்

338 0

13th_rajapaksa_1786715fதமிழர்களுடன் ஒப்பிடுகையில் பௌத்த சிங்களருக்கு அறிவுக்கூர்மை குறைவு – என்கிற சுயமதிப்பீடே சிங்கள இனத்தின் தாழ்வு மனப்பான்மைக்குப் பிரதான காரணமாக இருந்தது. இது ஒன்றும் அரசாங்க ரகசியமில்லை. கல்வியறிவால் உயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் மீதான சிங்களரின் காழ்ப்புணர்ச்சிக்கு இதுதான் அடிப்படை.

குறைந்துகொண்டே போகிற ஓர் இனத்தில் பிறந்த நமக்கு மற்றவரின் அறிவுக்கூர்மை குறித்தெல்லாம் சந்தேகப்படுவதற்கான தகுதி அறவே இல்லை. தமிழர்களையும் சிங்களரையும் ஒப்பிட்டுப் பார்ப்பதை விட சிங்களத்தையும் இந்தியாவையும் ஒப்பிட்டுப் பார்ப்பது தான் முக்கியம் என்று படுகிறது எனக்கு!

திருகோணமலையை அமெரிக்காவுக்குக் கொடுக்கப்போவதைப் போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி இந்தியாவைப் பதறச் செய்ததில் தொடங்கி கெஞ்சிக் கூத்தாடி வரவழைத்த இந்திய ராணுவத்தை அவமதித்து வெளியேற்றியது வரையிலான முதல் கட்டமாகட்டும்…….

இந்தியாவின் உதவிகளைக் வைத்தே தமிழின அழிப்பை நடத்தி முடித்துவிட்டு போர்க்கதாநாயகனாகக் காட்டிக்கொண்டது முதல் சர்வதேசத்திடமிருந்து தன்னைக் காப்பாற்றாவிட்டால் இந்தியாவையும் போட்டுக்கொடுத்துவிடுவோம் என்று மிரட்டுவது வரையிலான அடுத்த கட்டமாகட்டும்…..

ஒவ்வொரு கட்டத்திலும் இந்தியாவைக் காட்டிலும் தனக்குத்தான் அறிவுக்கூர்மை கூடுதல் என்பதை நிரூபித்து வந்திருக்கிறது இலங்கை.

நேற்று (டிசம்பர் 29), கொழும்பில், சர்வதேசப் பத்திரிகையாளர்களைச் சந்தித்திருக்கும் மகிந்த ராஜபக்ச இனப்படுகொலையில் இந்தியாவின் பங்குகுறித்து மீண்டும் பேசியிருக்கிறார். ‘இறுதி யுத்தக் காலத்தில் இலங்கைக்கு இந்தியா எல்லாவிதங்களிலும் உதவியது குறித்து ஏற்கெனவே பலமுறை பேசியிருக்கிறேன். ஆனால் அந்த உண்மைகள் வெளியானால் தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்படும். அதனால் இந்தியா அதுகுறித்துப் பேசுவதேயில்லை’ என்பது மகிந்தனின் வாக்குமூலம்.

மகிந்த ராஜபக்ச என்கிற நபர் ஒரு தனி நபரல்ல! இலங்கையின் அதிபராக இருந்த நபர். அந்த நபரின் ஆட்சிக்காலத்தில் தான் சுமார் 60 ஆண்டுகளாக இலங்கை திட்டமிட்டு நடத்திவந்த இனப்படுகொலை இறுதிக்கட்டத்தை எட்டியது. போர் – என்கிற பெயரால் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். சந்தேகத்துக்கே இடமில்லாமல் அது ஒரு இனப்படுகொலை.

மகிந்த ராஜபக்ச தலைமையிலான இலங்கை அரசு நடத்திய அந்த இனப்படுகொலைக்கு மன்மோகன்சிங் தலைமையிலான இந்தியா சகலவிதத்திலும் உதவியது. இந்தக் குற்றச்சாட்டை நாம் ஏழெட்டு ஆண்டுகளாக எழுப்பி வருகிறோம்.

இந்திய நாடாளுமன்றத்தில் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தவர் மூத்த நாடாளுமன்றவாதியான யஷ்வந்த் சின்ஹா. ‘இந்தியா அந்தப் போரை மறைமுகமாக நடத்தவில்லை நேரடியாகவே நடத்தியது’ என்பதை தெளிவாக எடுத்துச் சொன்னவர் அவர். மன்மோகன்சிங்கோ சோனியாவோ சிதம்பரமோ அதை மறுக்கவேயில்லை.

யஷ்வந்த் சின்ஹா சொன்னதை உறுதி செய்கிறது மகிந்த ராஜபக்சவின் ஒப்புதல் வாக்குமூலம். இந்தியா இல்லாமல் இனப்படுகொலை நடக்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறது. இதன் அடிப்படையில் இந்தியாவின் நிலை குறித்து நாம் கேள்வி எழுப்பியாக வேண்டும். ஒரு இனப்படுகொலை விஷயத்தில் இந்தியாவும் பொறுப்பேற்க வேண்டிய அவலம் நேர்ந்திருப்பது குறித்து நீங்களும் நானும் வருத்தப்படலாம்தான்…. என்றாலும் வேறு வழியில்லை.

2009 இனப்படுகொலையைத் தூண்டிவிட்டதே இந்தியாதான் – என்பது மறுக்க இயலாத முதல் குற்றச்சாட்டு. அதற்கு சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் விடுதலைப் புலிகளிடம் தோல்வி கண்டு இலங்கையிலிருந்து வெளியேறியது இந்திய ராணுவம். அது ராஜீவ்காந்தியின் பிழையான வெளியுறவுக் கொள்கைக்குக் கிடைத்த தோல்வியே தவிர இந்திய ராணுவத்தின் தோல்வியல்ல! ஆனால் காங்கிரஸ் என்கிற தமிழர் விரோத இயக்கம் அந்தத் தோல்வியை இந்தியாவின் தோல்வியாகவே சித்தரிக்க முயன்றது. அதனாலேயே பழிவாங்க நினைத்தது.

காங்கிரஸ் தலைமை தனக்குத்தானே உருவாக்கிக்கொண்ட ஒரு போலி கௌரவத்தின் விளைவுதான் 2009 இனப்படுகொலை. அதன் விளைவுதான் ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழ்மக்கள் கொல்லப்பட்டது. ஆயிரமாயிரம் அப்பாவித் தமிழ்ச் சகோதரிகள் அல்லல் பட்டு ஆற்றாது அழுத கண்ணீருக்கு அதுதான் காரணம்.

அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல்தான் ‘கொன்று முடி’ என்று உத்தரவிட்டது மன்மோகன் அரசு. ‘இந்தியாவின் போரைத்தான் நாங்கள் நடத்தினோம்’ என்று ராஜபக்ச கொடுத்த பூர்வாங்க வாக்குமூலம் அதற்கான ஆதாரம். சூடும் சுரணையுமுள்ள ஒவ்வொரு தமிழனும் இந்தியாவின் கள்ளத்தனத்தை எதிர்த்தது இதனால்தான்! அப்போதிருந்த தமிழக அரசு மட்டும்தான் இந்தியாவைக் கண்டிக்கவில்லை. ஜடம் மாதிரி கிடந்த அந்த மரப்பாச்சி அரசின் முதல்வர் – திருவாளர் கலைஞர் கருணாநிதி.

‘…..சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது.. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல்கொடுத்தால் ஆம் என்றோ இல்லை என்றோ எந்தப் பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியது தானே….’ என்று 2009 ஜனவரியில் பேராண்மையோடு கேட்டான் தம்பி முத்துக்குமார். அவனது கேள்வியை நாம் மீண்டும்மீண்டும் எழுப்பினோம். அப்போது மத்தியிலிருந்த காங்கிரஸ் அரசு பதில் சொல்லவேயில்லை. அதன் தயவில் முதல்வர் பதவியில் ஒட்டிக் கொண்டிருந்த கலைஞர்பிரான் அந்தக் கேள்வியைக் காதில் வாங்கிக்கொள்ளவேயில்லை.

ராமச்சந்திரா மருத்துவமனையில் கலைஞர் கருணாநிதி பதுங்கிக்கொள்ள அதன்பிறகாவது ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. தலைவர்கள் இந்தியாவின் நிலையை அம்பலப்படுத்துவார்கள்…. இந்தியாவின் துரோகத்திலிருந்து ஈழத்து உறவுகளைக் காப்பாற்றுவார்கள் என்று எதிர்பார்த்தோம். அந்தப் பிரகஸ்பதிகள் ஒரு துரும்பைக் கூடத் தூக்கிவைக்கவில்லை. இனப்படுகொலையை நிறுத்த ராஜபக்சவே கொடுத்த வாய்ப்பைக் கூட அவர்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

சொந்த இனம் கொல்லப்படுவதைக் கண்டித்து காங்கிரஸ் பிச்சைபோட்ட பதவியைத் தூக்கி எறிய இறுதிவரை முன்வரவில்லை – கோபாலபுரத்துச் சக்கரவர்த்தியும் சக்கரவர்த்தித் திருமகனும்!

இப்போது இந்த மகானுபாவர்களின் மனசாட்சிக்குத்தான் சவால் விடுகிறது மகிந்த மிருகம். ‘இந்தியா உதவியது குறித்த உண்மைகள் வெளியாகியிருந்தால் தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்பட்டிருக்கும்’ என்று மகிந்தன் சொல்வதற்கு ‘இனப்படுகொலை செய்வது இந்தியாதான் என்கிற உண்மை தமிழகத்துக்குத் தெரிந்திருந்தால் தமிழகம் கொதித்து எழுந்திருக்கும்’ என்பதல்லாமல் வேறென்ன அர்த்தம்?

கலைஞர் நினைத்திருந்தாலும் இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியாது – என்று சப்பைக்கட்டு கட்டுகிற நண்பர்கள் மகிந்தன் சொன்னதைப் படித்துப் பார்க்க வேண்டும். இனப்படுகொலையை இந்தியாதான் நடத்துகிறது – என்கிற உண்மை அம்பலமாகியிருந்தால் தமிழகம் கொதித்து எழுந்திருக்கும்….. தமிழகம் கொதித்து எழுந்திருந்தால் இனப்படுகொலை நின்றிருக்கும். இதுதான் யதார்த்தம். அதைத் தடுத்தது யார்?

இந்த யதார்த்தத்துக்கு இன்னொரு பக்கம் இருக்கிறது. சோனியாவின் தயவால்தான் இனப்படுகொலை நடக்கிறது என்பது அம்பலமாக கலைஞர் வழிவிட்டிருந்தால் சோனியாவின் தயவில் பதவியிலிருந்த கலைஞர்பிரானின் ஆட்சி கவிழ்க்கப்பட்டிருக்கும். அதனால்தான் திருவாளர் கருணாநிதி அதைப்பற்றிப் பேசவேயில்லை சோனியாவும் அவரைக் கவிழ்க்க முயலவில்லை. இந்தத் துரோகத்தைத்தான் நாம் கண்டித்தோம் கண்டிக்கிறோம்.

நடப்பது இனப்படுகொலை என்பதும் சோனியாதான் அதற்கு மூலகாரணம் என்பதும் பிரதமர் மன்மோகன்சிங்குக்கும பிரணாப்இ அந்தோணி சிதம்பரத்துக்கும் தெரிந்திருக்கும். கலைஞருக்கும் ஸ்டாலினுக்கும் கூட அது நிச்சயம் தெரிந்திருக்கும். இதெல்லாம் எங்களுக்குத் தெரியாது என்று அவர்கள் சொன்னால் ஒன்று அவர்கள் அயோக்கியர்கள் என்று அர்த்தம். அல்லது அறிவுக் கூர்மையற்றவர்கள் என்று அர்த்தம். இரண்டில் தாங்கள் யாரென்பதை ஒரு பொது அறிவிப்பின்மூலம் அவர்கள்தான் தெரிவிக்க வேண்டும்.

இவர்களது அறிவு எந்த அளவுக்குக் கூர்மையானது என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் இவர்களது அரசியல் அறியாமையையோ அயோக்கியத்தனத்தையோதான் இலங்கை பயன்படுத்திக் கொண்டது என்பதை மட்டும் தெளிவாக உணர முடிகிறது.

புத்தி இருக்கிறதோ இல்லையோ இலங்கைக்குக் குறுக்குப்புத்தி அதிகம். முதலில் மலையகத் தமிழர்களின் வியர்வையில் சம்பாதித்த அந்நியச் செலாவணியைக் கொண்டு ஆயுதங்களை வாங்கி ஈழத் தமிழ் மக்களின் விடுதலை உணர்வை நசுக்கியது இலங்கை. பின்னர் அதைக் காட்டிலும் தந்திரமாகத் திட்டமிட்டு இயல்பான நண்பர்களாக இருந்துகொண்டிருந்த ஈழத்துக்கும் இந்தியாவுக்கும் இடையே ஒரு திட்டமிட்ட மோதல் போக்கை உருவாக்கியது.

ராஜீவ் காந்தி கொலையால் உண்மையிலேயே ஆதாயம் பெற்றவர்கள் நரசிம்மராவும் இலங்கையும்தான்! இந்த யதார்த்தத்தின் அடிப்படையில் பார்க்கிற எவருக்கும் அந்தக் கொலையின் தாத்பரியம் குறித்த ஐயம் எழும். அது பகுத்தறிவு உள்ள எவருக்கும் எழுகிற ஐயம். இந்தியா மட்டுமே இதற்கு விதிவிலக்கு. அதனால்தான் சகோதரி ஜெயலலிதா சொன்னதை ஏற்காமல் இலங்கையை நட்பு நாடு என்றே குறிப்பிடுகிறார்கள் இன்றுவரை! ‘பெயக்கண்டும் நஞ்சுண்டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர்’ என்கிற வள்ளுவத்தைக் கரைத்துக் குடித்துவிட்டார்களோ என்னவோ!

தனது சுயமரியாதையைத் தன்னிஷ்டப்படி அடக்கமோ தகனமோ செய்ய இந்தியாவுக்கு உரிமையிருக்கலாம்…. அதற்காக தமிழர்களும் சேர்ந்து உடன்கட்டை ஏறியாக வேண்டுமென்று சொல்ல இந்தியாவுக்கு அதிகாரமில்லை.

இனப்படுகொலைக்கு ராஜபக்சக்கள்தான் காரணம்….
என்பது சில நண்பர்களின் கருத்து.
கலைஞரால் அதைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியாது…..
என்பது அவர்களது வாதம்.
இவர்களுக்குத்தான் பதில் சொல்லியிருக்கிறது மகிந்த மிருகம்.

‘அதைக்குறித்துப் பேசினால் தமிழகத்தில் குழப்பம் ஏற்படும் என்பதால் இந்தியா வாய்திறக்கவில்லை’ என்று ராஜபக்ச சொல்வதிலிருந்து கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு வாய்திறந்து பேசாததன் பின்னணியில் இருந்தது சோனியாதான் என்பது தெளிவாகிறது.

சோனியாவின் இந்த கள்ள யுத்தத்தையும் கருணாநிதியின் கள்ள மௌனத்தையும் நரேந்திரமோடிக்கு எடுத்துச் சொல்ல பொன்னாரும் தமிழிசையும் தவறக் கூடாது. காங்கிரஸின் விருப்பப்படிதான் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் – என்கிற உண்மையை வரலாற்றில் பதிவு செய்துவிட்டால் அதற்குப் பிறகு தமிழகத்தில் காங்கிரஸ் தலைதூக்கவே முடியாது.

தன்னுடைய பேட்டியில் இந்தியாவின் நிலை குறித்து மேலதிகக் கேள்விகளை எழுப்பியிருக்கிறான் மகிந்தன்.

‘நான் அதிபராக இருந்தபோது சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் கொழும்பு வந்ததற்கே இந்தியா ஆயிரம் கேள்விகேட்டது. இப்போது இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்துக் கொண்டேயிருக்கிற நிலையில் இந்தியா வாயே திறக்காமல் இருப்பதற்கு என்ன காரணம்? திருகோணமலை துறைமுகம் தங்கள் வசமாகிவிட்டதால் மௌனம் சாதிக்கிறார்களா’ என்பது மகிந்தனின் மிகமுக்கியக் கேள்வி.

மகிந்தனின் பேட்டியை முழுமையாக வெளியிட்டிருக்கும் ‘டெய்லி மிர்ரர்’ நாளேடு- INDIA ‘SILENT’ ON GROWING CHINESE INFLUENCE – என்றே தலைப்பு கொடுத்திருக்கிறது. இனப்படுகொலையில் சோனியாவுக்கும் காங்கிரஸுக்கும் இருந்த தொடர்பை அம்பலப்படுத்தும்போதுஇ மகிந்தனின் இந்தக் கேள்விக்கும் பாரதீய ஜனதா அரசு பதில் சொல்ல வேண்டும்.

இது பாரதீய ஜனதாவுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கும் கிடைத்திருக்கிற அரிய வாய்ப்பு. இனவெறி இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வித்தியாசத்தை உணர்த்துவதற்கான வாய்ப்பு.

மகிந்தன் தலைமையிலான ஆட்சி ஒரு கொடிய இனப்படுகொலையைச் செய்தது. அது தெரிந்தும் மகிந்தனை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்த மைத்திரியும் ரணிலும் அவனைக் காப்பாற்றுவதிலேயே குறியாயிருக்கிறார்கள். இந்தியா அப்படியல்ல என்பதை நிரூபித்தாக வேண்டும்.

இன்னொரு நாட்டின் அரசு செய்த கொடிய இனப்படுகொலைக்கு இந்தியாவிலிருந்து உதவியவர்கள் மீது அந்த மனிதாபிமானமற்ற நடவடிக்கைக்காக உரிய நடவடிக்கை எடுக்க பாரதீய ஜனதா அரசு முன்வந்தால் தமிழ்நாட்டில் பாரதீய ஜனதா மதிப்பு உயர்வதுடன் சர்வதேச அரங்கில் இந்தியாவின் மதிப்பும் உயரும். இந்த வரலாற்று வாய்ப்பை பாஜக நழுவ விட்டுவிடக் கூடாது.