’உடனடி சம்பள தீர்வு சாத்தியமில்லை’

183 0
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு வழங்குவது நடைமுறைக்கு சாத்தியமில்லை என்று நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்கள் கூறியதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இந்த விடயத்தைத் தெரிவித்தார்.

இந்த முடிவு எடுக்கப்பட்டால், அது ஏனைய அரச ஊழியர்களின் இணையான சேவைகளையும் பாதிக்கும். எனவே, அனைத்து பொது சேவைக்கும் போதுமான சிந்தனை அளித்து அனைவருக்கும் நியாயமான ஒரு தீர்வை கொண்டு வர முடிவு செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.

அதன்படி, அனைத்து பொதுச் சேவைகளுக்கும் நீதி வழங்கும் வகையில் நிரந்தரத் தீர்வை வழங்குவதே அமைச்சரவை அமைச்சர்களின் முடிவு என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் தற்போதைய கடுமையான சுகாதார மற்றும் பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, மூன்று மாதங்களுக்குள் தாக்கல் செய்யப்படும் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் கொண்டு வர அமைச்சரவை அமைச்சர்கள் முடிவு செய்துள்ளனர் என்றும் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் தொற்றுநோய் சூழ்நிலை காரணமாக, அனைத்து அரசாங்க வருமானமும் சரிந்துவிட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக, மக்களை வாழ வைப்பது அவசியம் என்று அவர் கூறினார்.

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சேவைகளை அமைச்சரவை அமைச்சர்கள் பாராட்டியுள்ளதுடன், மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாக கல்வியமைச்சர் குறிப்பிட்டார்.

நேரத்தை வீணாக்க வேண்டிய அவசியமில்லை. இந்த பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதே அமைச்சரவை அமைச்சர்களின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.