கடலட்டைப் பண்ணை விவகாரத்துக்கு தீர்வு

191 0

பூநகரி – கௌதாரிமுனை கடலட்டைப் பண்ணைகளுக்கான அனுமதிகளை வழங்கி வைத்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த பிரதேசத்தில் இலங்கை – சீனக் கூட்டு நிறுவனத்தால் பரீட்சார்த்தமாக அமைக்கப்பட்டுள்ள கடலட்டை குஞ்சு பராமரிப்பு நிலையத்தை சட்ட ரீதியாக கௌதாரிமுனை கடற்றொழிலாளர் சங்கத்தின் பொறுப்பில் ஒப்படைப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் கடந்த சில வாரங்களாக பரபரப்பாக பேசப்பட்ட கௌதாரிமுனை கடலட்டை பண்ணை விவகாரத்துக்கு கடற்றொழில் அமைச்சரால் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

 

பூநகரி நக்டா நிறுவன வளாகத்தில், இன்று (10) நடைபெற்ற குறித்த ஒன்றுகூடலில் ஏழு பேருக்கு அனுமதிப் பத்திரங்களை வழங்கிவைத்து, அதன் பின்னர் பூநகரி, கௌதாரிமுனையில் கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்காக விண்ணப்பித்துள்ள அப்பிரதேச கடற்றொழிலாளர்கள் மற்றும் தனியார் முதலீட்டாளர்கள் ஆகியோர் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கௌதாரிமுனைப் பிரதேசத்தில் கடலட்டை பண்ணை அமைப்பதற்கான குறித்த பிரதேசத்தைச் சேர்ந்து சுமார் 52 கடற்றொழிலாளர்கள் ,துவரை விண்ணப்பித்திருந்தனர்.

அதனடிப்படையில், பொருத்தமான இடங்களை அடையாளப்படுத்தி வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிய ஆலோசனைக்கு அமைவாக, பண்ணை அமைப்பதற்கான இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் பண்ணைகளை அமைப்பதற்கான ஆரம்ப முதலீடுகளை வழங்குவதற்கு தனியார் முதலீட்டாளர் ஒருவரும் கடற்றொழில் அமைச்சரினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், உடனடியாக அதற்கான பணிகளை ஆரம்பிக்குமாறு பயனாளர்கள் மற்றும் அதிகாரிகளை கடற்றொழில் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை, இலங்கை – சீன கூட்டு நிறுவனத்தால் கௌதாரிமுனையில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சார்த்த கடலட்டைக் குஞ்சு பராமரிப்பு நிலையத்தின் முதலீடும் தொழில்நுட்பமும் தமக்கு அவசியமாக இருப்பதால், குறித்த கடலட்டை குஞ்சு பராமரிப்பு நிலையத்தை, கௌதாரிமுனை கடற்றொழிலாளர் சங்கத்திடம் ஒப்படைப்பதற்கு தீர்மானக்கப்பட்டள்ளதாகவும், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுத்துள்ளார்.

கௌதாரிமுனையில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சார்த்த கடலட்டைப் பராமரிப்பு நிலையம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனினால் மக்களை குழப்பும் வகையிலான கருத்துக்கள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வந்தது.

இதனால் மக்களின் உண்மையான விருப்பங்களை அறிந்து கொள்வதற்காக இன்றைய சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனுக்கு பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும், அவர் கலந்துகொள்ளவிலை என்பது குறிப்பிடத்தக்கது.