வெளிநாடு செல்ல எதிர்பார்த்துள்ளவர்களுக்கு சிறப்பு தடுப்பூசி திட்டம்

219 0

உயர்கல்வி, வியாபாரம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக வெளிநாடு செல்ல எதிர்பார்த்துள்ளவர்கள் அது தொடர்பில் உரிய ஆவணத்தை சமர்ப்பித்து தாம் செல்லவுள்ள நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதற்கான வசதிகளை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், குறிப்பிட்ட சில நாடுகள் சில தடுப்பூசிகளை ஏற்றுக் கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நாடுகள் சில தடுப்பூசிகளை ஏற்றுக் கொண்டுள்ளன. இந்த குறிப்பிட்ட நாடுகளுக்கு உயர் கல்வியை தொடர்வதற்காக, வியாபார நடவடிக்கைகளுக்காக அல்லது பிள்ளைகளின் கற்றல் செயற்பாடுகளுடன் தொடர்புடைய நிகழ்வுகளில் பெற்றோர் கலந்துகொள்வதற்காக செல்ல வேண்டியேற்படும்.

அவ்வாறானவர்கள் உரிய ஆவணங்களை வெளிநாட்டலுவல்கள் அமைச்சில் சமர்ப்பித்து தாம் செல்லவுள்ள நாடுகளில் அங்கீகரிக்கப்படுகின்ற தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடியும். இணையவழியூடாக இதற்கு விண்ணப்பிக்க முடியும். இவ்வாறானவர்களுக்கு வழங்குவதற்காக ஒரு தொகை தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.