சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்.பி.வேலுமணி வீட்டு முன்பு அ.தி.மு.க.வினர் போராட்டம்

206 0

கோவை சுகுணாபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு கோவை சுகுணாபுரத்தில் உள்ளது. இந்த வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இந்த தகவல் காட்டு தீயாக கோவை முழுவதும் உள்ள அ.தி.மு.கநிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு பரவியது.

இதையடுத்து கோவை மாவட்டத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுணன், பி.ஆர்.ஜி அருண்குமார் உள்பட 8 பேரும், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் அவரது வீட்டின் முன்பு குவிந்தனர். குறிப்பாக பெண்கள் அதிகளவில் அங்கு திரண்டிருந்தனர்.
லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்று வரும் கோவை சுகுணாபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு.

அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் அங்கிருந்த போலீசாரிடம் உள்ளே செல்ல அனுமதி கேட்டனர். ஆனால் அவர்கள் அனுமதிக்க மறுத்தனர். ஆனால் அதனையும் மீறி எம்.எல்.ஏ.க்களும், கட்சி தொண்டர்களும் உள்ளே நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து அவர்கள் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது ‘அஞ்சமாட்டோம், அஞ்சமாட்டோம், அடக்கு முறைக்கு அஞ்சமாட்டோம், எஸ்.பி.வேலுமணி வாழ்க’ என கோ‌ஷங்களை எழுப்பியபடியே இருந்தனர்.