கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட மீள்குடியேற்ற நடவடிக்கையின் போது, இதுவரை 3 இலட்சத்து 401 வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலக கண்ணிவெடிசெயற்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.
யுத்தத்தின் பின்னரான மீள்குடியேற்றத்தை மேற்கொள்ளும் பொருட்டு அடையாளம் காணப்பட்ட பகுதிகளில், காணப்பட்ட வெடிபொருட்கள் அகற்றப்பட்டு மக்கள் மீள்குடியமர அனுமதி வழங்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்டத்தின் மிக ஆபத்தான பகுதியாகவும் வெடிபொருட்கள் விதைக்கப்பட்ட பூமியாகவும் முகமாலைப்பகுதி காணப்படுகின்றது. தற்போது பதினொரு சதுர கிலோமீற்றர் வரையான பகுதிகளில் இவ்வாறு வெடிபொருட்கள் அகற்றப்படவேண்டியுள்ளது.
கிளாலி தொடக்கம் நாகர்கோவில் வரைக்குமான பகுதிகள் மிக ஆபத்து நிறைந்த பகுதிகளாக காணப்பட்டன. கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பச்சிலைப்பள்ளி ஆகிய நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் வெடிபொருள் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில், மனித நேய கண்ணி வெடி அகற்றும் நிறுவனங்கள் மேற்கொண்ட மீட்புப்பணிகள் போது இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
107,270 மிதிவெடிகளும் 505 அதி சக்தி வாய்ந்த கவச எதிர்ப்பு வெடிகளும், மிக ஆபத்தை விளைவிக்கக்கூடிய வெடிக்கும் நிலையில் காணப்பட்ட எறிகணைகள், கைக்குண்டுகள், துப்பாக்கி ரவைகள் உள்ளிட்ட 208,626 வெடிபொருட்கள் என 300,401 வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.