வடக்கு மாகாண விவசாய அமைச்சால் முத்தையன்கட்டு விவசாயிகளுக்கு உலர் உணவு வழங்கல்!

351 0

11-2முத்தையன்கட்டுக்குளத்தை நம்பி விவசாயத்தை மேற்கொள்ளும் 1000 பேருக்கு வரட்சி நிவாரணமாக வடமாகாண விவசாய அமைச்சு நேற்று சனிக்கிழமை (31.12.2016) உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்துள்ளது. ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்து கொண்டு உணவுப் பொதிகளை வழங்கி வைத்துள்ளார்.

முத்தையன்கட்டுக் குளத்தின்கீழ் பயிரிடப்படும் நிலப்பரப்பின் அளவை 6000 ஏக்கர் அளவாக அதிகரிக்கச் செய்யும் நோக்கோடு மேற்கொள்ளப்பட்டுவந்த முத்தையன்கட்டுக் குளத்தின் புனரமைப்புப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது. இப்புனரமைப்புப் பணிகளுக்காகக் குளத்தில் இருந்த நீரை முன்கூட்டியே திறந்து விடவேண்டிய அவசியம் ஏற்பட்டதால் 2016 ஆம் ஆண்டில் காலபோகச் செய்கைக்கான நீர் விவசாயிகளுக்கு வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், கால போகச் செய்கையில் விவசாயிகளால் பெருமளவுக்கு ஈடுபடமுடியவில்லை.

மழைநீரைச் சேகரிப்பதற்குத் தயாராகக் குளத்தின் புனரமைப்புப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டபோதும், பருவ மழை பொய்த்ததன் காரணமாக குளத்தில் போதியளவு நீரைச் சேமிக்க முடியவில்லை. இதனால் பெரும் போகத்திலும் முத்தையன்கட்டுக்குள விவசாயிகளால் முழுமையாக ஈடுபடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவற்றைக் கருத்திற் கொண்டு வரட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உலர் உணவு நிவாரணம் வழங்குமாறு முல்லை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாணசபை உறுப்பினர்கள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனிடம் மாகாணசபையில் அவரது பாதீடு உரை இடம் பெற்றபோது கோரிக்கை விடுத்திருந்தனர். இக்கோரிக்கைக்கு அமைவாகவே, வடக்கு விவசாய அமைச்சின் ஒரு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் பாதிக்கப்பட்ட 1000 விவசாயிகளுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.