திருகோணமலை மாவட்டத்தில் அதிக அளவில் முஸ்லிம்கள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக மீனவர் சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.
திருகோணமலை, சிறிமாபுர பகுதியில் நெற்று (08) திருகோணமலை மாவட்ட பிரஜைகள் குழுவினர் ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பில் மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் மீன் வளங்கள் திருகோணமலை மாவட்டத்தில் அழிந்து வருவதாகவும், இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் திருகோணமலை மாவட்ட மீனவர் சங்கத்தின் பிரதிநிதிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
திருகோணமலை கடற்பரப்பில் ஜமாலியா, குச்சவெளி, இறக்கக்கண்டி, மற்றும் மூதூர் பிரதேசங்களில் அதிக அளவில் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களைப் பயன்படுத்தி சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் திருகோணமலை மாவட்ட மீனவர் சங்கத்தின் தலைவர் எம்.சீ.பியால் ஹேமசிறி தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த அரசாங்கத்தில் மட்டுமல்லாது தற்போதைய அரசாங்கத்திலும் இந்த சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பாகப் பல தடவைகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியும் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையினால் உடல் ஆரோக்கியத்திற்கு உண்ணக்கூடிய மீன் வகைகளான குட்டி சுறா, ஒட்டி, ஓறா போன்ற மீன் இனங்கள் முற்றாக அழிந்து வருவதாகவும் இன்னும் ஓரிரு வருடங்களில் பாடசாலை புத்தகங்களில் மாத்திரம் இவ்வாறான மீன் வகைகளைப் பார்க்க முடியும் என திருக்கடலூர் மீனவர் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.