மேல் மாகாணத்துக்குள் பொதுப் போக்குவரத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
கொழும்பில் சகல வழித்தடங்களிலும் இந்த நடைமுறை கடுமையாக அமுல்படுத்தப்படுகின்றது.
இதனால், தனது பயணத்தை ஆரம்பிக்கு பஸ்தரிப்பிடம் அதற்கு அடுத்தடுத்த இரண்டொரு பஸ்தரிப்பிடங்களில் மட்டுமே பஸ் தரித்துநின்று பயணிகளை ஏற்றுகின்றது.
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் மற்றும் தனியார் பஸ், இரண்டு பஸ்களுமே இவ்வாறான நடைமுறையையே பின்பற்றுகின்றன.
இதனால், ஏனைய தரிப்பிடங்களில் காத்திருக்கும் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டதை அவதானிக்க முடிகிறது.
அதனடிப்படையில், பஸ்ஸொன்றின் ஆசனங்களில் இருக்கும் இருக்கைகளின் எண்ணிக்கையின் பிரகாரமே பயணிகள் ஏற்றப்படுகின்றனர்.
மீதமிருக்கும் இருக்கைகளுக்காக ஏதாவது ஒரு பஸ்தரிப்பிடத்தில் நிறுத்தப்படுமாயின், காத்திருக்கும் பயணிகள் திமுதிமுவென ஏறி,நின்றுக்கொண்டு பயணிக்கின்றனர்.
எனினும், முக்கியமான இரண்டொரு சந்திகளில் நிற்கும் போக்குவரத்துப் பொலிஸார், அவ்வாறான பஸ்களை வழிமறித்து, நின்றுக்கொண்டிருக்கும் பயணிகளை அவ்விடத்திலேயே இறங்குமாறு பணிக்கின்றனர்.
பயணக்கட்டணங்களை செலுத்தாத பயணிகள் இறங்கிவிடுகின்றனர். கட்டணங்களை செலுத்தியோர் அல்லது மிகுதி பணத்தை பெறவிருப்போர், இறங்காமல் நின்றுக்கொள்கின்றனர்.
எனினும், நின்றுக்கொண்டிருக்கும் பயணிகளை இறங்குமாறும் பயணிக்கும் போக்குவரத்துப் பொலிஸார், பயணிகள் இறங்காவிடின், அவர்களை இறக்குமாறு, சாரதிக்கும் நடத்துனருக்கும் பணிக்கின்றனர்.
அவ்வாறு இறங்காவிடின், சாரதி மற்றும் நடத்துனர் ஆகிய இருவரையும் இறங்குமாறு கடுந்தொனியில் பணிக்கின்றனர்.
இதனால், பஸ்ஸில் அமர்ந்திருக்கும் ஏனைய பயணிகள், நின்றுகொண்டிருப்பவர்கள் இறங்கிவிடுங்கள் என, கடுமையாக சத்தமிடுகின்றனர்.
இடைநடுவில் இறங்கிவிடப்படும் பயணிகள், வேறுவழியின்றி பெருந்தொகையை செலவழித்து வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி, தாங்கள் செல்லவேண்டிய இடங்களுக்கு செல்லவேண்டியுள்ளது.
அவசரமாக செல்லவேண்டியவர்கள், இரண்டு அல்லது மூவர் இணைந்து தாங்கள் செல்லவேண்டிய இடங்களுக்கு ஓட்டோவை வாடகைக்கு அமர்த்தி, பயணக்கட்டணத்தை பிரித்துகொள்கின்றனர்.
தனியே செல்லவேண்டியவர்கள், ஆகக் கூடுதலான கட்டணங்களை செலுத்தவேண்டிய நிலைமையே ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை தடுப்பதற்காக எடுக்கப்பட்டிருக்கும் இவ்வாறான நடவடிக்கைகள் சிறந்தது. எனினும், ஒரு வழித்தடத்தில் இடையிலிருக்கும் பஸ்தரிப்பிடங்களில் நின்றிருக்கும் பயணிகள் அல்லது பாதிவழியில் இறக்கிவிடப்படும் பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும்.