தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட தயங்குவது ஏன்? ஆய்வில் புதிய தகவல்

199 0

ஊரகப்பகுதிகளில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மேலும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டு வருவதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பலர் தயங்குவதற்கு காரணம் என்ன என்று பொது சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தடுப்பூசிதான் முக்கிய ஆயுதம். அதனை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது.
இந்தநிலையில், தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு தயக்கம் ஏன் உள்ளது என்பது தொடர்பான ஆய்வு ஒன்று அண்மையில் நடத்தப்பட்டது. தமிழகத்தில் மொத்தம் 95 இடங்களில் அதனை பொது சுகாதாரத்துறை நடத்தியது.
ஏறத்தாழ 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் அதுதொடர்பான தகவல்களை திரட்டினோம்.
அதில் 80.3 சதவீத ஆண்களும், 81.6 சதவீத பெண்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.
அதேவேளையில், 19.7 சதவீத ஆண்களும், 18.4 சதவீத பெண்களும் தடுப்பூசி செலுத்துவதற்கு தயக்கம் காட்டினர்.
அதற்கு பிரதான காரணமாக அவர்கள் கூறியது தடுப்பூசி செலுத்திக்கொள்ள அச்சமாக உள்ளது என்பதுதான்.
அதற்கு அடுத்தபடியாக தனக்கு கொரோனா தொற்று வராது என்ற அதீத நம்பிக்கையில் 36 சதவீதம் பேர் உள்ளதும் ஆய்வில் கண்டறியப்பட்டது. தடுப்பூசி தட்டுப்பாடு, தடுப்பூசிக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருப்பது, தடுப்பூசியின் செயல் திறன் மீதான சந்தேகம், உடன் எவரும் துணைக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வராதது என பல்வேறு காரணங்களும் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து, சம்பந்தப்பட்டவர்களிடம் தடுப்பூசியின் அவசியம் மற்றும் அதுதொடர்பான புரிதலை பொது சுகாதாரத்துறையினர் ஏற்படுத்தினர். தயக்கமின்றி தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று நம்பிக்கையும் விதைத்தனர். ஊரகப்பகுதிகளில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மேலும் விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் தடையின்றி தடுப்பூசிகளை செலுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.