விடுதலை வயல்களில் விதைத்துள்ள உயிர் விதைகளுக்கு உயிர் கொடுப்போம்!

941 0

20161127-mallaavi-thuyilum-illam-1உலக விடுதலைப் போராட்டங்களுக்கெல்லாம் மகுடம் சூட்டியதாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை இட்டுச்சென்றதுடன் மண்ணுக்குள்ளிருந்து விடுதலை வேள்வி நடத்திவரும் மாவீரர்களின் இலட்சியக் கனவிற்கு உயிர் கொடுப்பது உலகத் தமிழர்களின் வரலாற்றுக் கடமையாகும்.

ஆயுத மௌனிப்பின் பின்னரான காலகட்டத்தில் தமிழ் மக்களை வழிநடத்திச் செல்லும் பொறுப்பில் இருக்கும் அரசியல் தலைமையானது சலுகைகளுக்காக இன விடுதலையை தாரைவார்த்து அடிபணிவு அரசியலில் ஈடுபட்டு வருகின்றமையானது அந்த இலட்சியத்திற்காக தமது உயிரைத் தியாகம் செய்த பல்லாயிரம் மாவீரர்களுக்கு செய்யும் பெரும் துரோகமாகும்.

ஆயுதங்கள் மொனிக்கப்பட்டு எட்டு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் அந்த ஆயுதங்களின் இயக்கத்தின் பின்னால் மறைவாகவிருந்த விடுதலை வேட்கை இன்றும் உயிர்ப்போடுதானிருக்கின்றது. யாழ் முற்றவெளியில் ஆரம்பித்து மாவீரர் துயிலுமில்லமெங்கும் வியாபித்து நிற்கும் விடுதலை தாகம் வரும் 21 ஆம் திகதி மட்டு நகரிலும் வீச்சுப்பெறவுள்ளது.

தாயகம்-தேசியம்-தன்னாட்சி ஆகிய மூலாதாரக் கோட்பாட்டின் அடிப்படையிலமைந்த தீர்வே தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு ஒரே தீர்வாகும் என்பதை முரசறைந்தே முற்றவெளியில் எழுக தமிழராய் தமிழர்கள் அணியமாகியிருந்தார்கள். தமிழர் தாயகத்தை கூறுபோடும் நாசகார சதித்திட்டத்திற்கு ஆப்பு வைக்கும் எழுதலாகவே மட்டு நகர் எழுக தமிழ் நிகழ்வும் அமையவுள்ளது.

இவற்றுடன், யாவற்றுக்கும் உந்துவிசையாக விளங்கிவரும் மாவீரர்களுக்கு விழி நீர் கசிந்து சுடரேற்றி வணக்கம் செலுத்துவதற்காக மாவீரர்கள் உறங்கும் விடுதலை வயல்களில் அணிவகுத்து வந்த பல்லாயிரம் மக்களின் ஓர்மம் ஒரு விடயத்தை தெட்டத்தெளிவாக உணர்த்தியுள்ளது.

தம்மைத் தாமே ஆட்சி செய்யும் தன்னுரிமையின் வழியில் தாயகத் தமிழர்கள் அணியமாகியுள்ளதையே இவை எடுத்துக்காட்டுகின்றது. மக்களின் செல்கைக்கு நேர் முரணான பாதையில் தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசியல் தலைமையான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சென்று கொண்டிருப்பது வரலாற்றுப் பெருந்தவறாகும்.

சுதந்திர தமிழீழ சமதர்ம குடியரசை நிறுவும் உன்னத இலட்சியம் சுமந்து வீரமரணம் அடைந்து விடுதலை வயல்களாக விளங்கும் மாவீரர் துயிலுமில்லங்களில் விதைக்கப்பட்டிருக்கும் உயிர் விதைகளுக்கு உயிர் கொடுக்க புலரும் ஆங்கிலப் புத்தாண்டில் நாமெல்லோரும் உறுதியேற்போம்.

‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.’

ஆசிரியர்
குறியீடு இணையம்.
01/01/2017.