கேல் ரத்னா விருதுக்கு மேஜர் தயான்சந்த் பெயரை சூட்டியது மிகவும் பொருத்தம் – ஆர்.பி.உதயகுமார்

213 0

ஜெயலலிதா காலத்தில் நடமாடும் மருத்துவமனை சேவைத் திட்டம் மக்கள் மத்தியில் சிறப்பாக செயல்பட்டது. தற்போது அரசு அதை மக்களை தேடி மருத்துவம் என்று மாற்றியுள்ளதாக ஆர்பி உதயகுமார் கூறியுள்ளார்.

மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

தேசிய கைத்தறி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. கைத்தறி நெசவாளர்களுக்கு அதிகமான திட்டங்களை அ.தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்டது. கைத்தறி மற்றும் விசைத்தறி தொழிலாளர்களுக்கு இலவச மின்சாரமும், அதேபோல் அவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் இலவச வேட்டி சேலை திட்டமும் தொடங்கப்பட்டது.

அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் முழுவதும் அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டது. இதில் கிராமப்புற ஏழை-எளிய மக்கள் பெரிதும் பயன் பெற்றனர். தற்போது இந்த திட்டம் செயல்படுத்தபடாமல் உள்ளது. ஆகவே மக்களின் கோரிக்கையை ஏற்று அம்மா மினி கிளிக்கை அரசு மீண்டும் செயல்படுத்த வேண்டும்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்தில் நடமாடும் மருத்துவமனை சேவைத் திட்டம் இருந்தது. இந்த திட்டம் மக்கள் மத்தியில் சிறப்பாக செயல்பட்டது. தற்போது அரசு அதை மாற்றி மக்களை தேடி மருத்துவம் என்று மாற்றியுள்ளனர்.

ஒலிம்பிக் போட்டியில் நமது நாட்டின் ஆண்கள், மகளிர் ஆக்கி அணியின் சிறப்பாக செயல்பாடு நமது ஒட்டுமொத்த தேசத்தையும் கவர்ந்துள்ளது. ஆக்கி விளையாட்டு தொடர்பான ஆர்வம் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து கேல் ரத்னா விருதுக்கு மேஜர் தயான் சந்த் பெயரை சூட்டவேண்டும் என்று நாடு முழுவதும் மக்களின் வேண்டுகோளை ஏற்று ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருதை, மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளது மிகவும் பொருத்தமாகும். ஏனென்றால் மேஜர் தயான்சந்த் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த முன்னணி விளையாட்டு வீரர் ஆவார்.