கர்நாடக அரசை கண்டித்து தஞ்சையில் தடையை மீறி பா.ஜனதா உண்ணாவிரதம்

179 0

கர்நாடக அரசை கண்டித்து இன்று காலை தடையை மீறி தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு பா.ஜனதாவின் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது.மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்ட முயலும் கர்நாடக அரசை கண்டித்து தஞ்சையில் பா.ஜனதா கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். ஆனால் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு உண்ணாவிரத போராட்டத்துக்கு போலீசார் அனுமதி கொடுக்கவில்லை.

இருந்தாலும் இன்று காலை தடையை மீறி தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு பா.ஜனதாவின் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. இதற்காக அங்கு சாமியானா பந்தல் போடப்பட்டு ஏராளமான இருக்கைகள் போடப்பட்டிருந்தன. இந்த போராட்டத்துக்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கி உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார்.

முன்னதாக அவர் தஞ்சை திலகர் திடலில் இருந்து மாட்டுவண்டியில் விவசாயிகளுடன் ஊர்வலமாக புறப்பட்டு போராட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்தார். தொடர்ந்து அவர், காவிரியின் குறுக்கே அணை கட்டும் முடிவை கர்நாடகா அரசு திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினார்.

அவரை தொடர்ந்து மாநில துணை தலைவர் கருப்பு முருகானந்தம், முன்னாள் மாநில தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ, முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் பேசினர். தொடர்ந்து போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட பா.ஜனதாவினர் கலந்து கொண்டனர்.

இதனையொட்டி பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் போராட்டம் நடக்கும் பகுதியில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன.