காபூலில் பாதுகாப்பு அமைச்சர் வீட்டு முன்பு கார் குண்டு தாக்குதல் – 4 பேர் பலி

190 0

ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சரை குறி வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி பல்வேறு மாகாணங்களில் புறநகர் பகுதிகளை கைப்பற்றி உள்ளனர்.

அந்நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து தலிபான்கள் தங்கள் தாக்குதலை தீவிரப்படுத்தி நாட்டை கைப்பற்ற முயற்சிக்கிறார்கள்.

ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

தலிபான்களை ஒடுக்க ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினர் சண்டையிட்டு வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே முக்கிய நகரங்களை கைப்பற்ற தாக்குதல்களை அதிகப்படுத்தி வருகிறார்கள்.

சமீபத்தில் தலைநகர் காபூலில் உள்ள அதிபர் மாளிகை அருகே தாக்குதல் நடத்தப்பட்டது. அதேபோல் கந்தகார் விமான நிலையத்திலும் ஏவுகணை தாக்குதலை நடத்தினர். இதையடுத்து ஆப்கானிஸ்தான் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சரை குறி வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். தலைநகர் காபூலில் ஷெர்பூர் பகுதியில் பாதுகாப்பு அமைச்சர் பிஸ்மில்லாகான் முகமது வீடு உள்ளது.

இந்த வீட்டு முன்பு கார் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும் 3 பயங்கரவாதிகள் துப்பாக்கியுடன் வீட்டுக்குள் நுழைய முயன்றனர். அவர்களை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 பொதுமக்கள் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த நிலையில் காபூலில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி இருப்பதை அடுத்து இந்தியாவின் உதவியை ஆப்கானிஸ்தான் நாடி உள்ளது.

அந்நாட்டு வெளியுறவு துறை மந்திரி முகமது அனீப் அத்மர் இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஆலோசனை நடத்த வலியுறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அதேபோல் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளை நடவடிக்கைகள், அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு ஐ.நா. சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.