முல்லைத்தீவு மாவட்டம் சிலாவத்தைப் பகுதியில் உள்ள யாழ் மறைமாவட்ட ஆயர் இல்லத்துக்கு சொந்தமான சுவாமி தோட்டக்காணியில் குடியிருக்கும் மக்களுக்கு காணி அனுமதி பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு கடந்த வியாழக்கிழமை நடைபெற்றுள்ளது.
யாழ் ஆயர் இல்லத்தில் சுவாமி தோட்டத்துக்கு சொந்தமான தியோகு நகர் பகுதியில் ஏறத்தாழ 95 குடும்பங்கள், முதியோர் சங்கம், முன்பள்ளி, சைவ ஆலயம் பொது நோக்கு மண்டபம் என்பன அடங்கிய தியோகு நகர் எனும் கிராமம் அமைந்துள்ளது.
இக் கிராமத்தில் உள்ள மக்களுக்கும், அமைப்புகளுக்கும் சைவ ஆலயத்திற்குமாக யாழ் கத்தோலிக்க திரு அவைக்குரிய காணியை யாழ்ப்பாணம் கத்தோலிக்க ஆயர் பேரருட்திரு யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை பகிர்ந்தளித்துள்ளார்.
குறித்த தியோகு நகர் எனும் கிராம மக்களுக்குக் காணி வழங்கும் நடவடிக்கையில், முதற் கட்டமாக 50 உரிமங்கள், நன்கொடை உறுதிகளாக மக்களுக்கு வழங்கப்பட்டன. அவற்றை யாழ் மறைமாவட்ட ஆயரின் பெயரால், மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அவர்கள் மக்களுக்கு கையளித்தார்.
இந்நிகழ்வு நாட்டில் உள்ள கொவிட் 19 சுகாதார வழிகாட்டலுடன் தியோகு நகர் கிராம அபிவிருத்திச் சங்கத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்டு இடம்பெற்றிருந்தது.