வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தொழிலாளர்கள் வாகனமொன்றை இறக்குமதி செய்வதற்கான தற்காலிக அனுமதியை வழங்குமாறு விடுக்கப்பட்டுள்ள முன்மொழிவை அரசாங்கம் பரிசீலிக்குமென இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2020ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியின் ஆண்டறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் தொலவத்த ஒரு முன்மொழிவை வழங்கியுள்ளார். அவரது முன்மொழிவை அரசாங்கம் நிச்சயமாக பரிசீலிக்கும். பாராளுமன்ற உறுப்பினர் டொல்வத்த, வெளிநாடுவாழ் இலங்கைத் தொழிலாளர்களுக்கு ஒருவருடத்திற்கு வாகனமொன்றை ; இறக்குமதி செய்வதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என்றே முன்மொழிந்துள்ளார்.
அத்தகைய ஏற்பாடுகளை மேற்கொண்டு இறக்குமதி வரியை டொலர்களில் வசூலித்தால் அரசாங்கத்துக்கு மேலதிகமாக டொலர்களை சேகரிக்க முடியும்.
வாகன இறக்குமதி தடை மூலம் அரசாங்கத்தால் நிதியை சேமிக்க முடிந்தது என்பது உண்மைதான். எவ்வாறாயினும், வெளிநாட்டிலுள்ள தொழிலாளர்கள் ஒரு வாகனத்தை இறக்குமதி செய்ய அனுமதிக்கும் தற்காலிக வசதியை ஏற்படுத்துவதன் மூலம் கூடுதல் டொலர்களை எம்மால் சேமிக்க முடியும்.
பிரேமநாத் டொல்வத்தவின் முன்மொழிவு ஒரு சுவாரஸ்யமானதாகும், நாங்கள் அதை நிச்சயமாக கருத்தில் கொள்வோம். 2020ஆம் ஆண்டில் கடனை செலுத்த முடியாதென கூறினர்.
2021இல் கடனை செலுத்த முடியாதென்றனர். தற்போது 2022 அல்லது 2023இல் கடனை செலுத்த முடியாது போகுமென கனவு காண்கின்றனர்.