எங்கள் சிங்கள அரசியல்வாதிகள் விட்டில் பூச்சிகளைப் போன்றவர்கள். எரியும் நெருப்பைத் தேடிப் போய்த் தம்மை
எரித்துக் கொள்ளும் சுபாவம் உடையவர்கள். அவர்கள் சீனர்களை நம்புவார்கள் ஆனால் தமிழர்களை நம்பமாட்டார்கள்! என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
மிகவும் மனவருத்தத்துடன் தான் நான் 2020ம் ஆண்டின் மத்திய வங்கி அறிக்கை பற்றிய விவாதத்தில் பேச எழுந்துள்ளேன். இதுவரை காலமும் எமது கடன்களை காலத்திற்குக் காலம் இடைவிடாமல் திருப்பிக் கட்டி வந்த நாங்கள் அந்த நற்பெயருக்கு இழுக்கை ஏற்படுத்தும் விதமாக வாயிற்படியில் காலூன்றி நிற்கின்றோம். ஏதாவது ஒரு சர்வதேசக் கடனை உரியவாறு உரிய நேரத்தில் கட்டாது விட்டால் அது மற்றைய சகல கடன்களையும் பாதிக்கும். அவ்வாறு
அது மிகப் பெரிய ஆபத்தாக உருவெடுக்கும். எமது கடன்காரர்கள் யாவரும் உடனே தமது கடன்களை முழுமையாக நாங்கள் திருப்பிக் கட்ட வேண்டும் என்று கேட்பார்கள. அதே நேரத்தில் அவற்றைக் கட்ட எம்மால் வேறு கடன்களைப் பெற முடியாத ஒரு ஆபத்து நிலை ஏற்படும். உண்மையில் எமக்குக் கடன்தர எவரும் முன்வரமாட்டார்கள். சீனா போன்ற ஒரு நாட்டின் அடிமை நாடாகவன்றி எம்மால் தனித்தியங்க முடியாமல் போய்விடும்.
சீன கம்யூனிசக் கட்சியின் 100 வது வருடத்தை முன்னிட்டு நாங்கள் தங்க நாணயங்களை வெளிக்கொண்டு வருகின்றோம். ஏற்கனவே பல நிறுவனங்களின் முன் ஆங்கில, தமிழ் ஏன் சிங்கள மொழி கூடப் பாவிக்கப்படாமல் சீன மொழியில்
மட்டும் பெயர்ப்பலகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஒரு வேளை எமக்கு நடக்கப் போவதை முன்கூட்டியே அறிந்து தான் இவ்வாறான செயல்களில் நாம் ஈடுபடுகின்றோமோ நான் அறியேன். ஆனால் இவ்வாறான நடவடிக்கைகள் பூகோள அரசியலில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றது என்பது பற்றி சிந்தித்தோமா? முகத்தைப் பகைத்து
மூக்கை வெட்டும் நடவடிக்கைகளில் நாம் ஈடுபட்டு வருகின்றோம்.
முக்கியமாக எமக்குக் கவலையளிக்கும் ஒரு விடயந்தான் எமது மீண்டுவரும் கடன்களை அரசாங்க வருமானத்தைக் கொண்டு அடைக்க முடியாமல் இருப்பது. 2020ல் கொண்டு வரப்பட்ட வரிக் கொள்கை அரச வருமானத்தை வெகுவாகக்
குறைத்தது. பொது மக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்திருந்தும் தற்போதைய வாழ்க்கைச் செலவின் அபரிமிதமான அதிகரிப்பானது குறித்த வரிக் கொள்கையின் நன்மைகளை மக்களுக்குக் கிடைக்கப் பண்ணாமல் ஆக்கிவிட்டது. பொருளாதார விருத்தியின்றி அரச திறைசேரி சதா காலமும் நெருக்குதலுக்கு
இலக்காகி நிற்கின்றது. இவ்வாறான நிலையில் எமது கடன்களை அடைக்கபபோதுமான வருமானங்களை எம்மால் பெறமுடியாதிருப்பதால் மாதச் சம்பளங்களைக் கூடக் கட்ட முடியுமோ என்ற நிலைக்கு நாங்கள் வந்துள்ளோம்.
ஆகவே அரசாங்கம் தொடர்ந்தும் கடன் எடுக்க வேண்டிய ஒரு நிலையிலேயே தற்போது இருக்கின்றது. நாங்கள் கடன் பொறி ஒன்றில் அகப்பட்டுள்ளோம். ஆனால் அதில் இருந்து மீள வழிதேடாமல் இப்பொழுதும் அரசியல் பேசிக்
கொண்டே காலம் கடத்திவருகின்றோம்.
மாண்புமிகு கெஹெலிய ரம்புக்வெல அவர்கள் அண்மையில் ஊடகங்களுக்கு ஒரு செய்தி சொன்னார். “அரசாங்கம் ஒரு பில்லியன் டொலர்களை கடன் அடைப்பதற்காகக் கட்டியுள்ளது என்பதில் பெருமை அடைகின்றேன்” என்றார்.
ஆனால் அவர் மிகுதி இருக்கும் 34 பில்லியன் கடன் அடைக்க வேண்டிய தொகையை எப்பொழுது கட்டப் போகின்றார் என்பது பற்றிக் கூறவில்லை. எது எவ்வாறு இருப்பினும் எமது அந்நியச் செலாவணியின் குறைவினால் சில
நிறுவனங்களால் கடன் கடிதங்கள் திறக்க முடியாது என்று கூறப்பட்டதாக அறிய நேரிட்டது. எமது அந்நிய செலாவணி அந்த அளவுக்குக் குறைந்துள்ளது அல்லவா? இப்படியே போனால் எம்மால் பெற்றோலையும் டீசலையும் இறக்குமதி செய்யக்கூட முடியாமல் போய்விடும். முன்னொரு காலத்தில் கலாநிதி ற.தகநாயகா அவர்கள் பெற்றோல் விலையைக்
கூட்டியமையால் மாட்டு வண்டியில் நாடாளுமன்றம் வந்தார். ஆனால் தற்போதைய நிலை அதிலும் மிக மோசமானது. கையில் பணம் இருந்தால்க் கூட வாங்குவதற்குப் பெற்றோலோ டீசலோ இருக்காது. முன்னெப்பொழுதும் இல்லாத அளவு நாளுக்கு நாள், வாரத்துக்கு வாரம், மாதத்திற்கு மாதம் நாம் கடதாசி பணத் தாள்களை அச்சிட்டு வந்துள்ளோம்.
செயற்கை முறைகளினால் சட்டத்திற்கு அமைவற்ற முறைகளினால் நாங்கள் எமது நாணயப் பெறுமதியை ஏற்றி வைத்துக் கொண்டு இருக்கின்றோம். எமக்கு என்ன நடக்கப் போகின்றது என்பது சுவரில் எழுதப்பட்டுள்ளது. ஆனால் நாங்கள் அதைப்
படிக்காமல் அரசியல் பேசிக் கொண்டிருக்கின்றோம். பாதிக்கப்பட்ட மக்களின் நலனை நினைக்காது நாம் கண்டபடி செயற்பட்டு வருகின்றோம்.
எமது நாட்டு மக்களை நாங்கள் எங்கு கொண்டு வந்துள்ளோம் ? பட்டினி, கடன், மன உளைச்சல் என்ற நெருப்பு எமது மக்களைத் தாக்கும் நிலையிலும் நாம் நீரோ மன்னர் பிடில் வாசித்தது போல நடந்து கொண்டு செல்கின்றோம். எங்களுக்கு சேதன உரமே தேவை என்று கூறி நாம் அசேதன உர இறக்குமதியை நிறுத்திக் கொண்டோம். உயரிய சிந்தனை தான் இது. ஆனால் அவ்வாறான ஒரு காரியம் மக்களை இரசாயன உரங்களில் இருந்து பாதுகாக்கவல்ல எடுக்கப்பட்டது.
எமது டொலர்களைச் சேமிக்கவே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் வழமைபோல் அதற்கான காரணம் தேசப்பற்றின் வெளிப்பாடே என்று கூறப்பட்டது. இவ்வாறு உர இறக்குமதியை தடை செய்ய முன் விஞ்ஞான ரீதியாக அதன்
தாக்கம் ஆராய்ந்து அறியப்பட்டதா? அப்படி எனில் எந்த நிறுவனம் அதற்கான சிபார்சை அரசாங்கத்திற்கு வலியுறுத்தியது? இடைக் காலம் எதனையும் கொடுக்காது திடீர் என்று இந்தக் கைங்கரியத்தில் ஈடுபட எந்த அரச நிறுவனம்
அறிவுரை வழங்கியது? இது பற்றிய ஆராய்வுகள் நடைபெற்றனவா? உர இறக்குமதியை உடனே நிறுத்தினால் எவ்வாறான தாக்கம் எமது பயிர்களின் விளைச்சலில், அறுவடையில் ஏற்படும் என்ற திட்ட அலசல் செய்யப்பட்டதா?
ஆனால் அரசாங்கம் வெளிநாடுகளில் இருந்து நெல்லினை இறக்குமதி செய்ய உத்தேசித்துள்ளதாக நாங்கள் அறிகின்றோம். அந்த நாடுகளில் இதே இரசாயன உரம் பாவித்தே பயிர்ச் செய்கை நடைபெறுகின்றது. அப்படியானால் உர
இறக்குமதியின் காரணம் மக்கள் நலம் அல்ல டொலர்களின் போதமையே என்று புலப்படுகின்றது.
எனினும் இயற்கை உரத்தை எமது பயிர் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து பெற எத்தகைய முன்னேற்பாடுகளை அரசாங்கம் செய்துள்ளது? இதுவரை காலமும் செயற்கை உரத்திற்குப் பழக்கப்பட்ட நிலங்கள் இயற்கை உரத்தை ஏற்று போதிய
பலன் தர மூன்று அல்லது நான்கு வருடங்கள் ஆகுமல்லவா? அப்படியானால் எமது விளைச்சலில் பாரிய வீழ்ச்சியை நாம் எதிர்பார்க்கலாம் அல்லவா? அவ்வாறானால் இவற்றின் உண்மைகளை அரசாங்கம் மக்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளதா?
வரலாற்றின் இவ்வாறான ஒரு இக்கட்டான நிலையில் கூட நாங்கள் அரசியல் பேசிக் கொண்டு காலத்தைக் கடத்துவதன் மர்மமென்ன? வடமாகாணத்தை எடுத்தோமானால் அசேதன உர இறக்குமதி தடை செய்யப்பட்டதானது நீண்ட காலப் பாதிப்பை எமது மாகாணப் பொருளாதாரத்திற்கு ஏற்படுத்தப் போகின்றது என்பதில் சந்தேகம் இருக்கமுடியாது. ஏற்கனவே எமது மாகாண உள்நாட்டு மொத்த உற்பத்தியானது 2019ல் 4.7 சதவீதமாக இருந்தது. போரின் பின்னர் பாரிய பாதிப்பை எம் மக்கள் சந்தித்து வரும் வேளையில் இவ்வாறான இறக்குமதித் தடை பாரிய விளைவுகளை ஏற்படுத்தப்
போகின்றது.
அது மட்டுமல்ல. போரின் பின்னர் தொடர்ந்து படையினர் வடமாகாணத்தில் முகாம் கொண்டு இயங்குவதால் எமது விவசாய நடவடிக்கைகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. விவசாயிகளை மேலும் நஸ்டத்திற்குள் ஆழ்த்தும் விதமாக
படையினர் வடக்கு கிழக்கில் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். தமக்கு அரசால் வழங்கப்படும் பல உதவிகளால் சகாயங்களால் மானியங்களினால் படையினர் பயிர்களை குறைந்த செலவில் உற்பத்தி செய்யக் கூடியதாக உள்ளது.
ஆனால் விவசாயி அப்படி அல்ல. பல சிக்கல்களின் நடுவே விளைச்சல் உண்டு பண்ணுகின்றார்கள். அதன் பின்னரும் அவர்களுக்கு சந்தைப்படுத்தலில் பாரிய குறைபாடு உண்டு. எமது உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்தப் போதுமான
திட்டமிடுதல் இதுகாறும் நடைபெற்றதாகத் தெரியவில்லை. புதிய விவசாய அமைச்சர் அதற்கான நடவடிக்கைகளை எடுத்து எமது விவசாயிகளின் விளை பொருட்களை உரியவாறு சந்தைப்படுத்தடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எமது வடமாகாண பொருளாதாரம் ஒரு வித தேங்கு நிலையில் உள்ளது. தமிழ் மொழி தெரிந்த அமைச்சர் அளுத்கமகே
அவர்கள் விரைவில் எமது விவசாயிகளின் நிலையை மேன்மையுறச் செய்வார் என்று நம்புகின்றேன்.
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் இரு தரப்பு சிங்கள நண்பர்களிடமும் ஒரு வேண்டுகோளை பல தடவைகள் நான் முன்வைத்து வந்துள்ளேன். அதாவது தமிழ் மக்களை உங்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமாக்கி எமது புலம் பெயர் மக்களின் முதலீடுகளுக்கு வழி அமையுங்கள் என்று கேட்டுள்ளேன்.
வெளிநாட்டில் இருக்கும் சிங்கள உறவுகளையும் உள்ளடக்கிய எமது புலம் பெயர் உறவுகள் எம்மால் வேண்டப்படின் கட்டாயமாக அந்நியசெலாவணியைப் போதியவாறு எமது உள்நாட்டு முதலீடுகளில் ஈடுபடுத்த முன்வருவார்கள்.
இவ்வாறான செயற்பாட்டால் எமது தற்போதைய பொருளாதார சிக்கல் நிலையை நாங்கள் போக்கிக் கொள்ளலாம்.
மீண்டும் ஒரு முறை எமது சிங்கள பௌத்த அறிவுசால் சமூகத்திடம் ஒரு வேண்டுகோள் விடுக்கின்றேன். தமிழர்களையும் முஸ்லீம்களையும் உங்கள் அந்தரங்கத்திற்குள் ஏற்றுக் கொள்ளுங்கள். அவ்வாறு செய்து போதிய
முதலீடுகளை நாட்டிற்குள் வரவழையுங்கள். இதன் மூலமாக எமது அந்நியச் செலாவணிப் பிரச்சனைகளை நாங்கள் விரைவில் தீர்த்துக் கொள்வோமாக! இந்த நாட்டைக் காப்பாற்ற நாம் யாவரும் இணைய வேண்டிய முக்கிய தருணம் இது
தான்! என்றும் குறிப்பிட்டார்.