“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்தும் நடவடிக்கையில் நாம் இறங்கியுள்ளோம். கட்சியை விட்டு விலகியோர் எம்முடன் மீள இணையலாம். கட்சி என்ற ரீதியில் நாம் கௌரவத்துடன் அழைப்பு விடுக்கின்றோம்.”
– இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார, இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நாம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னேற்ற நடவடிக்கைகளை, நாட்டின் ஆறாவது ஜனாதிபதியும் கட்சியின் தலைவருமான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஆரம்பித்துள்ளோம்.
அதன் முதற்கட்ட நடவடிக்கையாக மாவட்ட மட்டத்தில் கட்சியைப் பலப்படுத்துவற்கான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம்.
இதற்கமைவாக காலி, புத்தளம், இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் கட்சியைப் பலப்படுத்துவற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்தச் செயற்பாடுகள் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பிரதேச சபை உறுப்பினர்கள், மாகாண சபைகளில் அங்கம் வகித்த உறுப்பினர்கள், கட்சியின் அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் வழமையைவிட மிகவும் அர்ப்பணிப்புடன் கட்சியை முன்னோக்கிக் கொண்டுச் செல்வதற்கான பயணத்தில் ஒன்றிணைந்துள்ளனர். இதனை நினைத்து நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.
எனவே, கட்சியை மீளக்கட்டியெழுப்பும் செயற்பாடுகள் எதிர்காலத்தில் மிகத் துரிதமாக முன்னெடுக்கப்படவுள்ளன.
அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று தலைவர்கள், தலைவிமாரை அழைத்து அவர்களுக்குத் தெளிவூட்டவுள்ளதுடன் கீழ் மட்டத்திலிருந்து கட்சியை கட்டியெழுப்புவதே எமது நோக்கம். கடந்த காலங்களில் கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக பலர் கட்சியிலிருந்து தூரமாகினர். அவர்களும் எம்முடன் மீள இணையவுள்ளனர்” – என்றார்.