இன்று ஆடிக்கிருத்திகையும், நாளை ஆடிப்பெருக்கும் கொண்டாடப்படுவதாலும், வார விடுமுறை தினம் என்பதாலும், திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று காலையில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
தமிழகத்தில் கொரோனா பரவல் 2-ம் அலை குறைந்ததை தொடர்ந்து கடந்த மாதம் 5-ந்தேதி முதல் வழிபாட்டு தலங்கள் மீண்டும் திறக்கப்பட்டன. திருச்செந்தூர்சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். எனினும் பக்தர்கள் புனித நீராட அனுமதி மறுக்கப்பட்டதால், கோவில் கடற்கரை, நாழிக்கிணறு பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.
பல மாதங்களுக்கு பிறகு வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டதால், கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தவாறு இருந்தது. வார விடுமுறை நாட்களிலும், செவ்வாய், வெள்ளிக்கிழமை போன்ற நாட்களிலும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.