இலங்கையர் ஒருவர் உலகிலேயே முதல் தடவையாக காற்றில்லாத டயர் ஒன்றைக் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.
லங்கா இன்வென்ஷன்ஸ் என்ற நிறுவனத்தின் தலைவரான தாஹிர் (மீலான்) மொகமட் என்பவரே இந்த நவீன சிந்தனையாளராவார்.
காற்றுக்குப் பதிலாக ஜெலி போன்ற ஒரு உறுதிமிக்க பொருள் டயரில் செலுத்தப்படுகிறது. இந்தப் பொருள் காற்று போல செயல்பட்டு பாதையில் செல்லும் போது ஏற்படக் கூடிய அழுத்தம் போன்றவற்றைத் தாங்கக் கூடிய சக்தி மிக்கதாக இருக்கிறது. இதனால், இந்த டயரில் துளைவிழாது. இதுதான் அதன் சிறப்பு அம்சம் என தனது கண்டு பிடிப்பு பற்றி தாஹிர் தெரிவித்தார்.
இந்த டயரை சர்வதேச ரீதியில் பிரபல்யப்படுத்த தாஹிர் திட்டமிட்டுள்ளார். இந்த டயர் எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றி அவர் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சுக்கு தகவல் வழங்கியுள்ளார்.
சர்வதேச சமூகத்தின் முன்பாக இலங்கையின் தொழில்நுட்பத் திறன்களை வெளிப்படுத்தி வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழில்நுட்ப அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்வதே தனது நோக்கம் எனவும் அவர் கூறுகின்றார்.
தாஹிர் இதற்கு முன்பும் ஒரு சாதனையைப் படைத்திருந்தார். அது அவராகவே வடிவமைத்த வாசிக்கப் பயன்படும் மூக்குக் கண்ணாடியாகும்.
இது பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கும், கண்பார்வை பாதிக்கப்பட்டவர்களுக்குமென தயாரிக்கப்பட்டது.
இந்த மூக்குக் கண்ணாடியின் வில்லைகள் முன்னோக்கி நகரும் போது பெரிய உருவங்கள் சிறிதாகவும், பின்னோக்கி நகரும் பொது சிறிய உருவங்கள் பெருதாகத் தெரியும்படி வித்தியாசம் காட்டுகிறது. பாவிப்பவரின் வசதிக்கு ஏற்றவாறு இதை சரி செய்யவும் முடியும்.
மேலும் தூரத்தில் உள்ள ஒருவர் கடைகளில் காணப்படும் பெயர் பலகைகளையும் வாசிக்கக் கூடிய வசதி இதில் இருக்கிறது. அதாவது, ஒரு பொருளைத் தெளிவாக பார்க்கும் வரையில் இந்த விசேட மூக்குக் கண்ணாடியை நகர்த்தலாம்.
தண்ணீரில் அணிந்து நடக்கக் கூடியதும், பல்வேறு பாதுகாப்பு காரணங்களுக்காக பயன்படுத்தக் கூடியதுமான ஒரு சப்பாத்தையும் வடிவமைத்திருப்பதாகவும் தாஹிர் மேலும் தகவல் தருகிறார்.
அண்மையில் வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் நடைபெற்ற ஒன்பதாவது உலகத் தமிழ் இஸ்லாமிய இலக்கிய மாநாட்டில் இவர் கௌரவிக்கப்பட்டது. இங்கு குறிப்பிடத்தக்கது.
இவர் தனது கண்டுபிடிப்புக்களை அறிமுகப்படுத்தவென என்ற இணையத்தளம் www.lankainvention.com ஒன்றையும் ஆரம்பித்துள்ளார்.