சீன முதலீட்டு திட்டத்திற்காக வழங்கப்பட இருந்த 15 ஆயிரம் ஏக்கர் காணிகளை அளவிடும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
சீன முதலீட்டு திட்டத்திற்காக காணிகளை சுவீகரிப்பது சம்பந்தமாக எழுந்துள்ள மக்களின் எதிர்ப்பு காரணமாக, 15 ஆயிரம் ஏக்கர் காணிகளை அளவிடும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு ஆலோசனை கிடைத்துள்ளதாக காணி அமைச்சின் செயலாளர் ஐ.எச்.கே. மஹானாம தெரிவித்துள்ளார்.
இதனிடையே அபிவிருத்தி வேலைத் திட்டங்களுக்காக சீனாவிற்கு வழங்கப்பட உள்ள அம்பாந்தோட்டை பிரதேச காணிகளை அடையாளம் காணும் பணிகள் தற்போதும் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக அபிவிருத்தி மூலோபாயம் மற்றும் சர்வதேச வர்த்தக அலுவல்கள் அமைச்சர் மலிக் சமரவிக்ரம குறிப்பிட்டுள்ளார்.
காணிகளை பெற்றுக் கொள்ளும் போது மக்கள் வசிக்காத காணிகள் மற்றும் அரசுக்கு சொந்தமான காணிகளுக்கே முதலிடம் வழங்குவாதாகவும், பொது மக்களின் காணிகள் பெற்றுக் கொள்ளப்படுமாயின் அவர்களுக்கு நியாயமான இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
அத்துடன் மனித குடியேற்றங்களை பாதுகாப்பதற்கு முதலிடம் வழங்குவது போன்றே, விலங்குகளின் வாழ்விடங்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசங்களையும் பாதுகாப்பது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக அபிவிருத்தி மூலோபாயம் மற்றும் சர்வதேச வர்த்தக அலுவல்கள் அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.