தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கு தமக்கு ஆட்சேபனை கிடையாது என கடற்றொழில் அமைச்சு சட்ட மாஅதிபர் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது.
பண்டிகை காலத்தை முன்னிட்டு இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க தீர்மானிக்கப்பட்டதாக கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர அண்மையில் அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பை அடுத்து, மீனவர்களை விடுவிக்குமாறு கடற்றொழில் அமைச்சினால் சட்ட மாஅதிபர் திணைக்களத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சின் பிரதி பணிப்பாளர் லால் டி சில்வா எமது செய்திப் பிரிவிற்கு தெரிவித்தார்.
அத்துடன், தமிழக மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட படகுகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விடுவிக்கப்படாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இந்திய இலங்கை மீனவ பிரச்சினை குறித்து இந்தியாவில் நாளைய தினம் நடைபெறவுள்ள
அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கு, கடற்றொழில் அமைச்சை பிரதிநிதித்துவப்படுத்திய அதிகாரிகள் இந்தியா நோக்கி இன்று செல்லவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.