வில்பத்து சரணாலயத்திற்கு சொந்தமான வனப்பகுதியை விஸ்தரித்து, அதனை அண்மித்துள்ள அனைத்து வனப் பகுதிகளும் உள்ளடங்கும் வகையில் அதனை வனஜீவராசிகள் வலயமாக பிரகடனப்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய பிரிவுகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதேபோன்று வில்பத்து உள்ளிட்ட அனைத்து வனப்பகுதிகளையும் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தொடர்ந்தும் கண்காணிக்கும் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
சுற்றாடல் அமைச்சின் கீழுள்ள அனைத்து நிறுவனங்களின் பிரதம அதிகாரிகளுடனும் ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற சந்திப்பொன்றின்போதே, ஜனாதிபதியால் இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
எந்தவிதத்திலும் முன்னெடுக்கப்படுகின்ற காடழிப்பு நடவடிக்கைகளுடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக பக்கச்சார்பின்றி சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
அத்துடன், காடழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற நபர்களுக்கு எதிராக நாட்டில் தற்போது காணப்படுகின்ற சட்டத்திற்கு அமைய தண்டப்பணம் மற்றும் சிறைத் தண்டனைகளை அவ்வாறே செயற்படுத்துமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்;.
இதேவேளை, மன்னார் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் இடம்பெறுவதாக கூறப்படுகின்ற காடழிப்பு நடவடிக்கைகள் குறித்து சில தரப்பினரால் முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான அறிக்கையொன்றை பெற்றுக் கொள்வதற்காக விசேட கண்காணிப்பு குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.
சுற்றாடல் அமைச்சு, வன பாதுகாப்பு திணைக்களம் மற்றும் வனவிலங்கு திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகள் மாத்திரமன்றி, சூழலியலாளர்களும், ஊடகவியலாளர்களும் இந்த கண்காணிப்பு குழுவில் இடம்பிடிக்க வேண்டும் என ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதேவேளை, மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்காக புதிதாக காணிகளை ஒதுக்குகின்ற போது, வனப் பகுதிகளுக்கு சற்று தூரத்தில் காணிகளை அடையாளம் கண்டுகொள்ளும் வகையிலான விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதியினால் இதன்போது ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.