காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று வவுனியாவில் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாட்டில் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட உறவுகளை தேடி கண்டறியும் சங்கம் இன்றைய உண்ணாவிரத போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
கடந்த பத்து வருட காலமாக தமது உறவினர்கள் காணாமல் ஆக்கப்பட்ட போதிலும், இதுவரை அரசாங்கம் சாதகமான பதிலை வழங்கவில்லை என்று தெரிவித்தே, காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வவுனியா மாவட்ட செலயகத்திற்கு முன்பாக உள்ள பண்டாரவன்னியன் சிலைக்கு முன்பாக குறித்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடாத்தப்பட்டுள்ளது.
எங்கே எங்கே எங்கள் பிள்ளைகள் எங்கே, அவர்கள் நலமுடன் இருக்கின்றார்களா வீடு தீரும்புவார்களா, மைத்திரி-ரணில் கூட்டின் பங்காளிகளாக மாறியதன் பலன் என்ன போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு உண்ணாவிரத்தில் ஈடுபட்டனர்.
தமக்கு தீர்வு கிடைக்காவிட்டால் எதிர்வரும் தைப்பொங்கலுக்கு பின்னர் தொடர் உண்ணாவிரத்தில் ஈடுபடப் போவதாகவும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.