ரவிராஜ் கொலைவழக்கில் சிங்களம் பேசும் யூரிமார்கள் எதிரிகள் குற்றமற்றவர் எனத் தீர்ப்பாளித்துள்ளனர். ஏற்கனவே கிளிவெட்டி குமாரபுரம் கொலை வழக்கிலும் இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டது. சிங்களப் பிரதேசத்திலுள்ள நீதிமன்றத்தில் சிங்களம் பேசும் யூரிமார் முன்னிலையில் இத்தீர்ப்பு எதிர்பார்ப்பட்டதொன்றுதான்.
நாடு சமூகமளவில் இரண்டாக பிளவுபட்டுள்ளது என்பதை இது மீண்டும் தெளிவுபடுத்துகின்றது. அதுவும் யூரிமார் அனைவரும் சிங்கள பட்டதாரிகள். இது பெருந் தேசியவாதம். சிங்கள படித்தவர்கள் மத்தியிலும் எவ்வாறு ஊன்றிக் கிடக்கின்றது என்பதை வெளிப்படுத்துகின்றது.
ரவிராஜ்ஜின் கொலை அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது. சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் அரசியலின் நியாயத் தன்மைகளை கொண்டு செல்கின்றார் என்பதும் மனித உரிமை விவகாரங்களை வெளிக்கொணர்கின்றார் என்பதும் தான் இந்தக் கொலைக்கு காரணங்கள்.
சிங்கள பௌத்த அரச ஆதிக்கத்திற்கு எதிராகவே தமிழர்களின் ஆயுதப்போராட்டம் இடம்பெற்றது. இதன் எதிர் நடவடிக்கை என்பது சிங்கள பௌத்த அரசை பாதுகாக்கும் நடவடிக்கையே. குற்றவாளிகள் சிங்கள பௌத்த அரசினைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக அரசின் கட்டளையின் பேரில் கொலைகளைச் செய்தமையால் சிங்கள தேசத்தை பொறுத்தவரை குற்றவாளிகள் தேசிய வீரர்கள்சிங்களக் கூட்டுமனம் அவர்கள் தண்டிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்காது. யூரிமார்களின் தீர்ப்பை இந்தவகையில்தான் பார்க்கவேண்டும். அவர்கள் தண்டிக்கப்பட்டால் அரசாங்கத்திற்கு எதிரான சிங்கள மக்கள் எதிர்ப்பு வலுவடையும். இதனை ஆட்சியாளர்கள் ஒருபோதும் விரும்பப்போவதில்லை.
இந்தவிவாகரம் மகிந்தர் அரசாங்கமோ மைத்திரி அரசங்கமோ பற்றிய பிரச்சினையல்ல. இது இலங்கை அரசு பற்றிய விவகாரம். இலங்கை அரசுருவாக்கம் பலவீனமடைவதை சிங்கள கூட்டுமனம் ஒருபோதும் அனுமதிக்காது. ரவிராஜ்ஜின் கொலையில் நீதி கிடைத்திருந்தால் தமிழத்தேசத்தின் இருப்பை சிங்கள தேசம் ஏற்பதாக அர்த்தப்படும். சிங்கள தேசத்தின் கூட்டுமானம் தமிழ்தேசத்தின் இருப்பை ஏற்பதில்லை. அந்த இருப்பு நிலைக்கக்கூடாது என்பதற்காகத்தான் போர்முடிந்தபின்னரும் கட்டமைப்புசார் இனப்படுகொலையை மேற்கொண்டு வருகின்றது. நிலைமாறு கால நீதியைக் கூட வழங்குவதற்கு அரசு தயாராக இல்லை. சிங்கள பௌத்த அரசு என்பதைப் பாதுகாப்பது ஒற்றையாட்சிக் கட்டமைப்புதான். அதனால்தான் ஒற்றையாட்சிக் கட்டமைப்பு மாற்றப்படக்கூடாது என்பதில் ஆட்சியாளர்கள் விடாப்பிடியாக உள்ளனர்.
ரவிராஜ் கொலை வழக்கின் தீர்ப்பு பல உண்மைகளை வெளிக்காட்டியுள்ளது. இதில் முதலாவது சிங்கள அரசின் நீதிமன்றங்களிலிருந்து தமிழ்மக்களுக்கு நீதிகிடைக்காது என்பதே. இந்த வழக்கு மட்டுமல்ல பண்டாரவளை பிந்தன்வௌ தடுப்புமுகாம் கொலை வழக்கு,திருகோணமலை கிளிவெட்டி குமாரபுரம் கொலை வழக்கு என்பனவும் இவற்றையே வெளிக்காட்டியது. ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கிலும் இதுவே ஏற்படும். அதில் சிலவேளை பிள்ளையான் குழுவை பலிக்கடாவாக்கலாம்.
பிள்ளையான் குழு அதனைச் செய்திருந்தாலும், அரசாங்கத்தின் கட்டளை இல்லாமல் இடம்பெற்றிருக்கும் எனக் கூறமுடியாது. ஜோசப் பரராஜசிங்கம் கொள்கைரீதியாக தமிழ்த்தேசியத்தை ஏற்றுக்கொண்டவர். வடகிழக்கு இணைப்பில் உறுதியாக இருந்தவர்.
அவர் இருந்திருந்தால் சம்பந்தன் என்ன சுத்துமாத்து செய்தாலும் தமிழ்த் தேசிய அரசியல் தொடர்பாக குறிப்பாக வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பாக ஜோசப்பரராஜசிங்கம் உறுதியாக இருந்திருப்பார். மிதவாதிகளினதும், ஆயுதப்போராளிகளினதும் கொள்கை ஒன்றாக இருப்பது சிங்களபௌத்த ஆட்சியாளர்களுக்கு மட்டுமல்ல இந்திய – அமெரிக்க சக்திகளுக்கும் இடைஞ்சலானதே. இதன்பின்னர் ஆயுதப்போராட்டத்தை அளிப்பதற்கு எந்தவொரு நியாத்தையும் அவர்களினால் கண்டு பிடித்திருக்க முடியாது.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கமும், சம்பந்தன் நிர்ப்பந்த ரீதியாகவாவது புலிகளை ஏற்றுக்கொண்டதும் இந்தசக்திகளுக்கு ஆரம்பத்தில் சங்கடமாகத் தான் இருந்தது. ஆனால் பின்னர் சம்பந்தனின் சுயரூபம் தெரிந்ததும் அமைதியானர்கள். புலிகள் இருந்தகாலத்தில் சம்பந்தனுக்கு எந்த அச்சுறுத்தல்களும் படையினரால் வரவில்லை. அவர் உச்ச பாதுகாப்பில் இருந்தார்.
இரண்டாவது நிலைமாறுகால நீதியை வழங்கப் போவதில்லை என்ற விடயமாகும். நிலைமாறுகால நீதியில் முக்கியமானது பாதிக்கப்பட்டவர்களின் நலன்களைப் பேணுவது. அதில் நீதி முக்கியமானது. இங்கு நீதி மறுக்கப்பட்டதன் மூலம் நிலைமாறுகால நீதி தமிழ் மக்களுக்கு வழங்கப்படமாட்டாது என்பது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
மூன்றாவது அரசியல் தீர்வு தமிழ் மக்களுக்கு வழங்கப்படப்போவதில்லை என்ற விடயமாகும் சிங்கள மக்களுக்கு போரில்லா நிலை மட்டும் சமாதானமாக இருக்கலாம். ஆனால் தமிழ் மக்களுக்கு அது மட்டும் சமாதானமல்ல. போரில்லா நிலை, இயல்புநிலையினைக் கொண்டுவருதல், அரசியல் தீர்வு ஆகிய மூன்றும் வரும் போதே சமாதானம் உருவாகும். இந்த மூன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்பு பட்டது.
போரில்லா நிலை என்பது நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கான அத்திவாரம். இயல்பு நிலையைக் கொண்டு வருதல் தான் நிலைமாறுகால நீதி. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்தல், ஆக்கிரமிப்புக்களை செய்யாதிருத்தல், அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், இராணுவப்பிரசன்னத்தை இல்லாது ஒழித்தல்போன்றன அனைத்தும் நிலைமாறுகால நீதியில் அடங்கும். நல்லிணக்கம் பற்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையை கொடுப்பது இதுதான். இதை ஆட்சியாளர்கள் செய்யவில்லை என்றால் அரசியல் தீர்வுககளிற்கு தாம் தயார் இல்லை என்பதை வெளிப்படுத்துகின்றரார்கள். என்பதே அர்த்தம்.
நான்காவது சர்வதேச விசாரணை ஒன்றே நீதியைப் பெற்றுத்தரும் என்பது நிரூபணமாகியுள்ளமையாகும். இலங்கை நீதிமன்றங்களிடமே இந்த விசாரணையை ஒப்படைப்பது குற்றவாளிகளிடமே விசாரணை செய்யும் அதிகாரத்தை ஒப்படைப்பதற்கு சமனாகும். அதனைத்தான் தீர்ப்பு நிரூபித்துள்ளது.தமிழ் மக்கள் சர்வதேச விசாரணையே வேண்டும் என கோருவதற்கான நியாயத்தையும் இந்தத் தீர்ப்பு வழங்குகின்றது.
ஜெனிவாவில் உள்ளகவிசாரணைக்கு கூட்டமைப்பு சம்மத்தினைக் கொடுத்திருந்தது. அந்தச் சம்மதத்திற்கு விழுந்த அடியாகவும் இதனைக் கொள்ளவேண்டும்.
சுமந்திரன் மேன்முறையீடு செய்யலாம் என்ற யோசனையை முன்வைத்திருக்கின்றார். இது மத்திரமல்ல இனிவரும் காலங்களில்; யூரர்களற்ற ட்ரயல்அட்பார் நீதிமன்றத்தை உருவாக்கி விசாரணை செய்யலாம் என்ற யோசனையையும்கூறியிருக்கின்றார். இவை அரசாங்கத்தை பாதுகாப்பதற்காக அவர் வைக்கும் யோசனைகள். ஆட்சியின் பங்காளி என்றவகையில் கூட்டுப் பொறுப்பை அவர் நிலைநாட்டமுற்படுகின்றார்.
அவரது இரண்டு யோசனைகளுமே தவறானவை. ரவிராஜ் கொலை வழக்கில் நீதி கிடைக்கவிலை என்பது சட்டப்பிரச்சினையல்ல முழுக்க முழுக்க அரசியல் பிரச்சினை. அரசியல் பிரச்சினையை அரசியல் வழிமுறைகளின் மூலம்தான் தீர்க்க முடியுமே தவிர சட்டவழிமுறைகளினால் ஒருபோதும் தீர்க்கமுடியாது.
சுமந்திரன் வலிவடக்கு காணி அபகரிப்பு தொடர்பாக மக்கள் தன்னிச்சையாக மேற்கொண்டபோராட்டத்தை தடுப்பதற்கும் இதனை ஒரு உபாயமாக மேற்கொண்டார். வழக்குகள் தொடரப்போவதாகக்கூறி போராட்டத்தை தடுத்தார். வழக்குகளும் முடியவில்லை, காணிகளும் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. மக்களை போராடவிட்டிருந்தால் அரசியல் நிர்ப்பந்தம் காரணமாக அரசாங்கம் கீழிறங்கி வந்திருக்கும். காணிகளும் விடுவிக்கப்பட்டிருக்கலாம்.
ரவிராஜ்ஜின் வழக்கில் மேன்முறையீடு செய்தாலும் நீதி கிடைக்கப்போவதில்லை. பண்டாரவளை பிந்தன் வௌ கொலை வழக்கில் மேன்முறையீட்டுவிசாரணையில் எதிரிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
சுமந்திரன் யூரர்களற்ற ட்ரயல் அட்பார் நீதிமன்றத்தையும் யோசனையாக முன்வைத்திருக்கின்றார். அங்கும் சிங்கள நீதிபதிகளே இருக்கப்போகின்றனர். அவர்கள் தமிழ் மக்களுக்கு நீதியை வழங்கப்போவதில்லை. தற்செயலாக நீதிவழங்கினாலும் மேன்முறையீட்டில் அவையெல்லாம் கவிழ்த்துக் கொட்டப்படலாம்.
இங்கு ஒரே வழி இதனை ஒரு அரசியல் விவகாரமாக கருதி அரசியல் ரீதியாக பேசுபொருளாக்குவதே. சர்வதேச மட்டத்தில் இதனைப் பேசுபொருளாக்கி சர்வதேச விசாரணைக்கும் சர்வதேசப் பாதுகாப்பிற்கும் அழுத்தம் கொடுக்கலாம். இன்று இது விடயத்தில் பாலஸ்தீன மக்கள் நீண்டகாலம் போராடி தீர்வைப் பெற்றுள்ளனர்.
பாலஸ்தீன நிலைப்பகுதியில் குடியிருப்புகளை அமைக்க இஸ்ரேலுக்கு தடை விதிக்கும் தீர்மானம் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.இஸ்ரேலுக்காக வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தும் அமெரிக்கா இந்தத் தடவை பயன்படுத்தவில்லை.இதன்மூலம் 1967 இன் பின்னர் அமைக்கப்பட்ட யூதக்குடியேற்றங்கள் சட்ட அந்தஸ்தினை இழக்கப் போகின்றன. நாமும் இந்த முயற்சிகளைச் செ;யது சுதந்திரத்தின் பின்னரான சிங்கள குடியேற்றங்களின் சட்ட அந்தஸ்தினை இழக்கச் செய்யவேண்டும்.
இங்கு எழும் முக்கிய கேள்வி நிலைமாறுகால நீதியும் இல்லை. அரசியல் தீர்வும் இல்லை என்ற நிலையில் தமிழ் மக்கள் என்ன செய்வது என்பதாகும். இலங்கை அரச அதிகாரக்கட்மைப்புக்குள் நிலைமாறுகாலநீதியும் அரசியல் தீர்வும் இரண்டு வழிகளிலேயே சாத்தியமாகும். ஒன்று சிங்கள மக்களின் சம்மதம்.இரண்டாவது சர்வதேசப் பாதுகாப்பு. சிங்கள மக்களின் சம்மதம் தற்போதைக்கு சாத்தியமில்லை.இதற்கான ஆரம்பவேலைகள் சிங்கள தேசத்தில் சிறிது கூட நடைபெறவில்லை.
சிங்கள மக்களின் சம்மதம் என்பது முழுக்க முழுக்க சிங்கள சமூக உருவாக்கத்தை மாற்றிக் கட்டமைப்பதுடன் தொடர்புடையது. சிங்கள பௌத்த கருத்து நிலைலக்கு பதிலாக பன்மைத்துவ கருத்துநிலையாக அது கட்டமைக்கப்படல் வேண்டும். வரலாறு ஜதீகங்கள் என்பவற்றுடனும் போராடவேண்டும்.
தேர்தல் அரசியல் காரணமாக எந்த சிங்களக் கட்சியும் இதற்கு தயாராக இல்லை. கட்சிகள் மட்டுமல்ல சிங்கள சிவில் நிறுவனங்கள் கூடத் தயாரராக இல்லை. ஒரு குறிப்பிட்ட பிரிவு சிங்களத் தரப்பின் ஆதரவில்லாமல் தமிழ் மக்களினால் சிங்கள மக்களுக்கு கருத்துக்களைக் கொண்டு செல்லவும் முடியாது. தற்போது ஆதரவுதரும் விரல்விட்டு எண்ணக் கூடிய சிங்கள நண்பர்களின் ஆதரவுடன் மட்டும் முன்னேறவும் முடியாது. அவர்களை அதிகம் வற்புறுத்துவது அவர்களையும் சங்கடத்திற்குள் ஆழ்த்துவதாகவே அமையும்
முன்னர் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றவர்கள் கூட பின்னர் மாறியுள்ளனர். இதனால் தான் 50 களில் கண்ட கொல்வினையும், என்.எம் பெரேராவையும் 60 களில் காணமுடியவில்லை.60 களில் கண்ட வாசுதேவாவை 80 களில் காணமுடியவில்லை. 80 களில் கண்ட தயான் ஜயதிலகவை 90 களில் காணமுடியவில்லை.
இரண்டாவது சர்வதேசப்பாதுகாப்புப் பொறிமுறையை நோக்கி நகர்வது. இதுவே தற்போதைய நிலையில் பொருத்தமானதாக இருக்கும். சர்வதேச வல்லரசுகள் தனிநாட்டை அங்கீகரிக்கத் தயாரில்லை என்றால் இலங்கை என்ற அரசு அதிகாரக் கட்டமைப்புக்குள் தமிழ் மக்கள் ஒரு தேசமாக இருப்பதற்கான பாதுகாப்பு பொறிமுறையை ஏற்படுத்தட்டும்.
தமிழ்மக்களைப் பொறுத்தவரை தொடரும் கட்டமைப்புசார் இன அழிப்பை முதலில் தடுக்க வேண்டும். தொடர்ந்து தங்களைத் தாங்களே நிர்வகிக்கக்கூடிய தற்காலிக ஆட்சிக்கட்டமைப்பை பெற்றுக்கொள்ள வேண்டும். இவை இரண்டிற்கும் சர்வதேசப் பாதுகாப்புடன் கூடிய இடைக்கால நிர்வாகமே ஒரே வழியாக இருக்கும். இந்த இடைக்கால நிர்வாகக் கோரிக்கையை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஏற்கனவே முன்வைத்திருந்தார்.
இது முழுக்க முழுக்க சர்வதேசமட்டத்தில் எமது விவகாரத்தை பேசுபொருளாக்குவதிலும், சர்வதேச அரசியலைக் கையாள்வதிலும் தங்கியுள்ளது. அரசங்கத்துடன் மக்களது ஆணை பெற்ற கட்சி இணக்க அரசியலை நடாத்திக்கொண்டிருக்கும் போது இது சாத்தியமில்லை. தமிழ் மக்களின் அபிலாசைகளை அங்கீகரிக்காத நிலையில் இணக்கத்திற்கு செல்வது இணக்க அரசியலல்ல. மாறாக சரணாகதி அரசியலே. முதலில் இந்த சரணாகதி அரசியலிலிருந்து நாம் விடுபடவேண்டும்.
இது விடயத்தில் நிலமும், புலமும், தமிழகமும் இணைந்த வகையில் ஒரு ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தினை முன்கொண்டு செல்வதற்கு நாம் தயாராக வேண்டும்.