கிளிநொச்சி கரைச்சி பிரதேச கிளிநகர் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பரவிபாஞ்சான் மக்கள் தங்களது காணிகள் விடுவிக்கப்படும் வரை தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இன்று சனிக்கிழமை காலை பத்து பரவிபாஞ்சான் பிரதான வீதியின் ஆரம்பத்தில் இந்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மீள்குடியேற்றம் செய்யப்பட்டு ஆறு ஆண்டுகள் கடந்த நிலையிலும் தாங்கள் இன்றும் சொந்த மாவட்டத்திற்குள்ளேயே இடம்பெயர்ந்தவர்களாக அகதி வாழ்வு வாழ்ந்து வருவதாகவும், நண்பர்கள் உறவினர்கள் மற்றும் வாடகை வீடுகளில் தங்களுது வாழ்க்கை பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் காணப்படுகிறது என்றும் கவலை தெரிவிக்கும் பரவிபாஞ்சான் மக்கள்
தங்களுக்கு தங்களுடைய உறுதிக்காணிகள் காணிகள் மீளவும் கிடைக்க வேண்டும் அதுவரைக்கும் இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் தொடரும் எனவும் குறிப்பிடுகின்றனர்.
இரரணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தங்களின் காணிகளை விடுவிக்குமாறு பல தடவைகள் அரசியல்வாதிகள், உயரதிகாரிகள், என பலரிடமும் முறையி;ட்டும் எந்தப் பயனும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்த மக்கள் இறுதியாக காணிகளை பிடித்து வைத்திருக்கின்ற இராணுவத்திடமும் கடிதம் மூலம் கோரிக்கையை விடுத்திருந்தோம் ஆனால் எங்களுக்க எந்த தீர்வும் கிடைக்கவில்லை எனவேதான் ஏற்கனவே தீர்மானித்ததன்படி உறுதியான நல்ல தீர்வு கிடைக்கும் வரை எங்களுடைய கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்திருக்கின்றோம் எனவும் குறிப்பிட்டார்கள். இந்தப் போராட்டத்தை தாங்கள் இரவு பகலாக தொடர்ந்தும் மேற்கொள்ள இருப்பதாகவும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
பரவிபாஞ்சான் காணிகளில் சில பகுதிகள் விடுவிக்கப்பட்ட போதும் இன்னும் ஜம்பதுக்கு மேற்பட்டவர்களின் காணிகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.