சென்னையில் இருந்து மாலை 5 மணிக்கு விமானம் மூலம் டெல்லி செல்லும் மு.க.ஸ்டாலின் இரவு தமிழ்நாடு இல்லத்தில் தங்குகிறார்
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த மாதம் 17-ந்தேதி டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
அப்போது தமிழகம் நலன் சார்ந்த திட்டங்களை நிறைவேற்ற தேவையான நிதியை ஒதுக்கி தரவேண்டும் என்று வலியுறுத்தினார். ஜி.எஸ்.டி. நிலுவை தொகையும் உடனே வழங்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
நீட் தேர்வை ரத்து செய்வது, மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் அப்போது வலியுறுத்தி பேசினார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சி இடைக்கால தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரையும் அவர் சந்தித்தார்.
இந்த நிலையில் இன்று மு.க.ஸ்டாலின் மீண்டும் டெல்லி செல்கிறார்.
சென்னையில் இருந்து மாலை 5 மணிக்கு விமானம் மூலம் டெல்லி செல்லும் மு.க.ஸ்டாலின் இரவு தமிழ்நாடு இல்லத்தில் தங்குகிறார். நாளை பகல் 12 மணியளவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து பல்வேறு விவரங்கள் குறித்து பேசுகிறார். தமிழகத்தில் நீட் தேர்வால் ஏழை, எளிய மாணவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக பாதித்து வருகிறார்கள்.
தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஒரு ஆண்டாக நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் செயல்படவில்லை. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் நீட் தேர்வு எழுதினாலும் அவர்களால் அதிக மதிப்பெண்கள் எடுத்து மருத்துவ படிப்பில் சேர முடியாது. எனவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
முக்கியமாக இந்த சந்திப்பின்போது மேகதாது அணை கட்ட அனுமதி அளிக்க கூடாது என்றும் இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் ஜனாதிபதியிடம் வலியுறுத்துகிறார்.
மேலும் தமிழக மக்கள் தொகைக்கு ஏற்ப அதிக அளவில் கொரோனா தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்துவார் என தெரிகிறது.
இதுகுறித்து அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறுகையில், ஜனாதிபதியை சந்திக்க ஏற்கனவே திட்டமிட்டிருந்தாலும் கொரோனா காரணமாக டெல்லி பயணம் தள்ளிப் போடப்பட்டிருந்தது. இப்போது ஜனாதிபதியை சந்திக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திங்கட்கிழமை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி முதல்-அமைச்சர் இன்று டெல்லி செல்கிறார்.
இவ்வாறு டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.