மக்களுக்கு போடப்பட்ட தடுப்பூசி விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

227 0

முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதுவதோடு நிற்காமல் பிரதமருக்கு அழுத்தம் கொடுத்து தடுப்பூசி பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக மக்களுக்கு போடப்பட்ட தடுப்பூசி விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று தமிழக அரசை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா நோய்த் தடுப்பூசியை கண்டுபிடித்து, இந்தியாவில் அந்தத் தடுப்பூசியை முதலில் முன்களப் பணியாளர்களுக்கும், பிறகு 60 வயது முடிவடைந்த முதியோர்களுக்கும் என்று படிப்படியாக கடைசியாக 40 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் செலுத்திக்கொள்ளலாம் என்று அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் மத்திய அரசு அறிவித்தது.
அப்போது, தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலினும், எதிர்க்கட்சித் தலைவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்வதால் பின்விளைவுகள் ஏற்படும் என்று மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தினர். தற்போது, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. செயல்படுவதால், தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் அதிகளவில் முன்வருகிறார்கள்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடனேயே உலகளாவிய டெண்டர் விடப்பட்டு, கொரோனா தடுப்புமருந்து கொள்முதல் செய்யப்பட்டு தமிழ்நாட்டு மக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்றது. பிறகு, தமிழ்நாட்டில் செங்கல்பட்டில் உள்ள மத்திய அரசின் தடுப்பு மருந்து தயாரிப்பு மையத்தை மாநில அரசே ஏற்று நடத்தும் என்றும், அங்கு கொரோனா தடுப்புமருந்து அதிகளவில் தயாரிக்கப்படும் என்றும் வாக்குறுதி ஒன்றை அளித்து, அந்த முயற்சி பலனளிக்காத நிலையில், தமிழ்நாடு அரசே வெளிச்சந்தையில் தடுப்புமருந்துகளை வாங்கி பொதுமக்களுக்கு அளிக்கும் என்று புதிய கதை ஒன்றை சொல்லியது.
இப்படி தினமும் ஒரு அறிக்கை, பேட்டி என்று மக்களிடையே பொய்யாக வாக்குறுதிகள் அளித்ததைத் தவிர வேறென்ன செய்தது இந்த அரசு?
கடந்த 13-ந் தேதி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்துக்கு தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என்று கோரி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். கடிதம் எழுதுவதோடு நிற்காமல் பிரதமருக்கு அழுத்தம் கொடுத்து தடுப்பூசி பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
முக ஸ்டாலின்
முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட பொதுமக்களில் பலர், 2 மாதங்கள் கடந்தபின்னும் 2-வது டோஸ் தடுப்பூசிக்காக பரிதவிக்கிறார்கள். கோவேக்சின் மருந்து போட்டவர்கள் அதே மருந்தை போட வேண்டும் என்றும், கோவிஷீல்டு மருந்து போட்டவர்கள் அதே மருந்தை போட வேண்டும் என்றும், இவை இரண்டும் பல தடுப்பூசி மையங்களில் இருப்பில் இல்லை என்றும் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.
எனவே, அரசியல் காழ்ப்புணர்ச்சியைத் தவிர்த்து, கொரோனா தடுப்புமருந்து விஷயத்தில் மற்றவர்கள் மீது வீண்பழி சுமத்துவதைக் கைவிட்டு, மக்களை காப்பாற்றும் பணியில் இந்த அரசு ஈடுபட வேண்டும்.
மத்திய அரசால் தமிழ்நாட்டுக்கு கடந்த 2 மாதத்தில் எத்தனை லட்சம் தடுப்பூசிகள் தரப்பட்டன, அவை எத்தனை பேருக்கு போடப்பட்டன, இன்னும் 2-வது டோஸ் தடுப்பூசி எத்தனை பேருக்கு போடப்பட வேண்டும் என்பதையும், மத்திய அரசிடம் இருந்து வரும் தடுப்பூசிகள் மாவட்டங்கள்தோறும் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படுகின்றன என்பது பற்றியும், தடுப்பூசி முகாமில் யார் யாருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது என்பது குறித்தும் தி.மு.க. அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.