தமிழீழ உறவுகளே !
2009 ம் ஆண்டு சிறீலங்கா பௌத்த பேரினவாத அரசு எம் மக்கள் மீது மனிதநேயமின்றி பெரும் நச்சுக்குண்டு வீச்சுக்களாலும் கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதல்களாலும் மற்றும் உயிர் காக்கும் உணவு மற்றும் மருந்துகளை தடை செய்தும் திட்டமிட்ட முறையில் தமிழினப்படுகொலையை மேற்கொண்டது. போர் மௌனிக்கப்பட்டு 12 ஆண்டுகள் கடந்தநிலையில், தொடர்ந்தும் தாயகத்தில் எம்மக்கள் மீது கட்டமைக்கப்பட்ட தமிழினவழிப்பினைச் சிறீலங்கா சிங்கள பௌத்த பேரினவாத அரசு திட்டமிட்டு முன்னெடுத்து வருகிறது.
இருந்தபோதும் 2009 ம் ஆண்டின் பின்னான காலப்பகுதியில் புலம்பெயர் தேசத்தில் மக்கள் முன்னெடுத்த அறவழிப்போராட்டங்கள், அரசியல் சந்திப்புகள், கருத்தரங்குகள், போன்றசெயற்பாடுகளால் இன்று நாம் பல முன்னேற்றங்களைக் கண்டுள்ளோம். அது மட்டுமல்லாமல் எமக்கு நீதி கிடைப்பதற்கான கதவும் திறக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அவையின் மனிதஉரிமை ஆணையாளர்களின் அறிக்கைகளைப் படித்த அனைவருக்கும் இவ்விடயங்களின் ஆழம் தெரிந்திருக்கும்.
இந்த நகர்வின் அடுத்தகட்ட முடிவினை எடுப்பதற்கு இன்னும் பதினைந்து மாதங்களேஉள்ளன. இந்நிலையில் எமது பட்டறிவுகளின் அடிப்படையில் போராட்டங்களைத் தொடர்ந்தும்நடாத்தி, சிறீலங்கா அரசின் அரசியல் நாடகத்தையும் கபடத்தனத்தையும் தமிழினப்படுகொலையை முன்னெடுக்கும் வெறியையும் உலகறியச்செய்து, தமிழீழ விடுதலைக்கான ஆதரவைத்திரட்டும் வேலைகளைத் துரிதப்படுத்தல் அவசியமாகின்றது.
இன்றுள்ள பூகோள நலன் சார்ந்த அரசியலில் எமது முயற்சிகள் மாத்திரமே எமக்கான விடுதலையைப் பெற்றுத்தரும்.
இலட்சியத்தால் ஒன்றுபட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது என்பதையும் தமது தலைவிதியினை நிர்ணயிக்கும் பெரும் சக்தியாக தமிழ் மக்களேஇருக்கின்றார்கள் என்பதையும் சர்வதேசம் விளங்கியுள்ளது. இந்த நிலையில் நீதிக்கான நாட்களை எண்ணி எமது வேலைகளை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பினைக்கொண்டவர்களாக உள்ள நாம் மக்கள் சக்தியாகத் திரண்டு, திறக்கின்ற சர்வதேசத்தின் கதவுகளின் வழியாக, சிறீ லங்கா சிங்கள பௌத்த பேரினவாத அரசினை அனைத்துலககுற்றவியல் நீதி மன்றத்திற்குக் கொண்டு செல்லும் வகையில் எமது போராட்டத்தை முன்னெடுக்கவேண்டும்.
«காலத்திற்கேற்ப வரலாற்று கட்டாயத்திற்கமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை» மற்றும் «நீதியின் அடிப்படையில், மனிததர்மத்தின் அடிப்படையில், சத்தியத்தின் அடிப்படையில் நியாயப்பாடு எமது பக்கமாக இருக்கும்பொழுது, நாம் எமது போராட்ட இலட்சியத்தில் உறுதி பூண்டு நிற்க வேண்டும். இலட்சியத்தில் உறுதி பூண்டு இறுதி வரை போராடும் மக்கள்தான் விடுதலையை வென்றெடுப்பார்கள்» என்ற தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின்கூற்றுக்களுக்கமைய இலட்சியத்தில் உறுதி கொண்டு தேசியத்தலைவரின் வழிகாட்டலில் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்திஅறவழிப்போராட்டங்களையும் அரசியல் சந்திப்புக்களையும் நடத்தி விடுதலையை விரைவு படுத்துவோம்.
அறவழிப் போராட்டங்களூடாக நாளாந்தம் எமது வலிகளையும் வேணவாக்களையும் குருதி தோய்ந்த கண்ணீர்களாக சிந்திக்கொண்டிருந்தாலும் அவையனைத்தும் நாளை மலரப் போகும்தமிழீழத்திற்கு உரமாக மாறும். தமிழீழம் மீட்கும் வரை, எம் மக்கள் விடுதலை பெறும் வரை ஓயாது எம் போராட்டம் இலக்கினை நோக்கி நகரும்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”