தங்கள் நாட்டு பகுதிகளில் குடியேற்றங்களை தடுத்து நிறுத்தினால் இஸ்ரேலுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார் என்று பாலஸ்தீன அதிபர் முஹ்மத் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நீண்ட நெடுங்காலமாக பகை நிலவி வருகிறது. ஆக்கிரமிப்பு பாலஸ்தீன பகுதிகளில், குறிப்பாக கிழக்கு ஜெருசலேம் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் வலுக்கட்டாயமாக குடியிருப்புகளை அமைத்து வருகிறது.
இதை தடுத்து நிறுத்தக்கோரி, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மலேசியா, நியூசிலாந்து, செனகல், வெனிசுலா ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்தன.அந்த தீர்மானத்தில், “கிழக்கு ஜெருசலேம் உள்ளிட்ட ஆக்கிரமிப்பு பாலஸ்தீன பகுதிகளில் குடியிருப்பு செயல்பாடுகளை இஸ்ரேல் முழுமையாக நிறுத்திக்கொள்ள வேண்டும். இது தொடர்பான சட்டதிட்டங்களை இஸ்ரேல் மதித்து நடக்க வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.
இந்த தீர்மானத்தின்மீது கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (டிச.23) ஓட்டெடுப்பு நடைபெற்றது. இந்த ஓட்டெடுப்பில் 15 நாடுகளில் 14 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. அமெரிக்கா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து விட்டது. இதனால் தீர்மானம் நிறைவேறியது.
இதனையடுத்து தீர்மானத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த இஸ்ரேல், ஐ.நா. சபை உடனான தமது உறவை முறித்துக் கொள்ளப் போவதாக தெரிவித்தது. இருப்பினும், பின்னர் தனது நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள ஒப்புதல் அளிப்பதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.
1979-ம் ஆண்டுக்கு பிறகு இப்போதுதான், குடியிருப்பு கொள்கையில் இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம் ஒன்று நிறைவேற அமெரிக்கா வழிவிட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக பேசிய அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாள ஜான் கெர்ரி இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பேசினார்.
இதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ ஜான் கெர்ரியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார்.இந்நிலையில், தங்கள் நாட்டு பகுதிகளில் குடியேற்றங்களை தடுத்து நிறுத்தினால் இஸ்ரேலுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார் என்று பாலஸ்தீன அதிபர் முஹ்மத் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.