சேகர் ரெட்டி கூட்டாளிகள் மேலும் 2 பேர் கைது

269 0

586535574arrestபுதிய ரூபாய் நோட்டுகளை பதுக்கியது தொடர்பான வழக்கில், சேகர் ரெட்டியின் கூட்டாளிகள் மேலும் 2 பேரை மத்திய அமலாக்கத் துறை புதன்கிழமை கைது செய்தது.

தொழிலதிபர் சேகர் ரெட்டி, அவரது கூட்டாளிகள் சீனிவாசலு, பிரேம்குமார், ராமச்சந்திரன், ரத்தினம் ஆகியோர் வீடுகளில், வருமான வரித் துறையினர் கடந்த 8 -ஆம் தேதி அதிரடி சோதனை நடத்தினர். அதில் ரூ.147 கோடி பணமும், 178 கிலோ தங்க கட்டிகளையும், தங்க நகைகளையும் பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் ரூ.34 கோடி, புதிய 2,000 ரூபாய் நோட்டுகளாகும். மேலும் வருமான வரித்துறையின் விசாரணை நடைபெறும்போதே, அதில் சிபிஐயும், மத்திய அமலாக்கத் துறையும் பங்கெடுத்தன.விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், சென்னை பெரியமேடு சென்டாம்ஸ் சாலையில் வசிக்கும் நகைக் கடை உரிமையாளர் மகாவீர் ஹிரானி, அசோக் எம்.ஜெயின் ஆகியோர் வீடுகளில் வருமான வரித்துறையினர் கடந்த 19 -ஆம் தேதி சோதனை செய்தனர். அதில் பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் ரூ.10 கோடியும், 6.5 கிலோ தங்கநகைகளையும் பறிமுதல் செய்தனர்.

புதிய ரூபாய் நோட்டுகளை பதுக்கியது தொடர்பாக சேகர் ரெட்டி மீதும், அவரது கூட்டாளிகள் மீதும் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.இந்த வழக்கில் சேகர் ரெட்டி, சீனிவாசலு ஆகியோரை கடந்த 21 -ஆம் தேதி சிபிஐ கைது செய்தது. புதுக்கோட்டையைச் சேர்ந்த ராமச்சந்திரன், திண்டுக்கலைச் சேர்ந்த ரத்தினம், பிரேம்குமார் ஆகிய 3 பேரும் 22 -ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.

அமலாக்கத்துறை கைது: இந்த நிலையில், மகாவீர் ஹிரானி, அசோக் எம்.ஜெயின் ஆகிய இருவரை மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் புதன்கிழமை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின.

முக்கியமாக ஹிரானியும், ஜெயினும் கமிஷனுக்காக சேகர் ரெட்டிக்கு ரூ.7 கோடி வரை பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை, புதிய 2,000 ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொடுத்திருப்பது தெரியவந்தது. மேலும் அவர்கள், மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த பரஸ்மால் லோதாவுக்கு நெருங்கிய கூட்டாளிகள் என்பதும் தெரியவந்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரும், பரஸ்மால் மூலமாகவே அந்த ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுத்திருப்பதாக அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இவ்வழக்கில் பரஸ்மால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, கைது செய்யப்பட்ட ஹிரானியும், அசோக்கையும் வரும் 11 -ஆம் தேதி வரை காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, அவர்கள் இருவரும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.