அதிமுக தலைமை அலுவலகத்தில் மோதல்: எம்.பி.யின் கணவர் மீது தாக்குதல்

274 0

adm5_3109788fஅதிமுக தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை ஏற்பட்ட மோதலில் எம்.பி.யின் கணவர் தாக்கப்பட்டார். இதனால், அதிமுக அலுவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அந்த கட்சியின் அடுத்த பொதுச் செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.ஆனால், புதிய பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பதற்காக, அந்தக் கட்சியின் பொதுக்குழு கூட்டம் வியாழக்கிழமை கூடுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்த பொதுக்குழு கூட்டத்தின்போது, சசிகலாவை பொதுச் செயலாளராக பொறுப்பேற்கும்படி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற உள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையில், சசிகலாவை பொதுச் செயலாளராக தேர்வு செய்யக்கூடாது எனக் கோரி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவியில் நீக்கம் செய்யப்பட்ட அதிமுக எம்.பி., சசிகலா புஷ்பா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், பொதுச் செயலாளர் பதவிக்கு, சசிகலா புஷ்பாவும் போட்டியிட விரும்புவதாக அதிமுகவினருக்கு தகவல் வெளியானது. இதையடுத்து, அதிமுக நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் பலர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பிற்பகலில் கூடினர்.
இதனால், அங்கு பிரச்னை ஏற்படாதவாறு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. ஆனால், அங்கு சசிகலா புஷ்பா வரவில்லை. அதற்கு மாறாக, அவரின் கணவர் லிங்கேஸ்வர திலகன், அவரது ஆதரவாளர்கள் 10 பேர், அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களைக் கண்ட அதிமுக தொண்டர்களில் சிலர் ஆவேசம் அடைந்தபடி, லிங்கேஸ்வரன் மற்றும் அவருடன் வந்த ஆதரவாளர்களை நோக்கி தாக்கத் தொடங்கினர்.

இதனால், அவர்களைக் காப்பாற்றும் வகையில், லிங்கேஸ்வரன் மற்றும் அவரது ஆதரவாளர்களை போலீஸார் வளையம் போன்று அமைத்து அதற்குள் கொண்டு வந்தனர்.ஆனாலும், போலீஸாரின் வளையத்தையும் மீறி, லிங்கேஸ்வர திலகன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில், லிங்கேஸ்வரனுக்கு முகம், மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அவரை, அங்கிருந்து மீட்ட போலீஸார், மயிலாப்பூர் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவர் தன் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது புகார் கொடுத்துள்ளார் என்று தெரிகிறது.

பின்னர், அவரை ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும், கட்சி அலுவலகத்தில் வந்து ரகளையில் ஈடுபட்டதாக, லிங்கேஸ்வர திலகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது அதிமுகவினரும் புகார் கொடுத்துள்ளனர்.புகார்கள் குறித்து போலீஸார் விசாரணை

அதிமுக ஈரோடு மாவட்ட நிர்வாகி சிந்து ரவிச்சந்திரன் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரில், “சசிகலா புஷ்பாவின் தூண்டுதலின்பேரில் அவரது கணவர் லிங்கேஸ்வரன் 10 பேருடன் கட்சி அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து தகராறு செய்தார். மேலும், கொலை மிரட்டல் விடுத்து அதிமுகவினரை தாக்கினார். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தார்.

இதேபோல், தமிழக அரசின் உள்துறைச் செயலர், சட்டம்- ஒழுங்கு டி.ஜி.பி., சென்னை பெருநகர காவல் துறை ஆணையர் ஆகியோருக்கு சசிகலா புஷ்பா அனுப்பியுள்ள புகார் மனுவில், “லிங்கேஸ்வரனை போலீஸார் அழைத்துச் சென்றனர். அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. அவரை மீட்டுத் தர வேண்டும். அவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியிருந்தார்.இந்த இரு புகார்களின்பேரில் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.