‘அனைத்துலக பத்திரிகை சுதந்திர விருது’ பெற்ற மாலினி சுப்ரமணியன்!

253 0

malini_subramaniyanஒவ்வொரு ஆண்டும்  உலகெங்கும் நெருக்கடியான சூழ்நிலையில் தைரியமாக   துணிச்சலாகப்  பணிபுரியும் பத்திரிகையாளர்களைத் தேர்ந்தெடுத்து கவுரவித்து வருகிறது  அனைத்துலக பத்திரிகையாளர் பாதுகாப்புக் குழு  (Committe to Protect Journalists)    அந்த வகையில், இந்தியா, எகிப்து, துருக்கி மற்றும் எல்சால்வடார் ஆகிய நான்கு  நாடுகளைச் சேர்ந்த நான்கு  பத்திரிகையாளர்களுக்கு, இந்த விருது 2016 நவம்பர் 22-இல் நியூயார்க் நகரில் நடந்த விழாவில்  வழங்கப்பட்டது.

அதில் இந்தியாவின் சார்பாக மனித உரிமை மீறல்களை  எதிர்த்து செய்திகளை வெளியிடுவதன்  மூலமாக ஓர் ஊடகப் போராட்டத்தை நடத்தி வந்த மாலினி சுப்பிரமணியனுக்கு இந்த “அனைத்துலக பத்திரிகை சுதந்திர விருது’ வழங்கப்பட்டுள்ளது.

“ஸ்க்ரோல் இன் ஆன்லைன்’ செய்தி தளத்தில்  கட்டுரைகள் எழுதி வருபவர்  இவர். அவரே சொல்கிறார்:

“சத்தீஸ்கர்  மாநிலத்தில்  பஸ்தார் பகுதி  மாவோயிஸ்ட்  மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இடையே அடிக்கடி மோதல்.. துப்பாக்கி சண்டை… தாக்குதல்கள்.. கொலைகள்… என கலவர  பூமியாக   இருந்து வருகிறது. மனித உயிர்களைக் காவு வாங்கும்  பிரச்னைக்குரிய இடமான காஷ்மீர் செய்திகளில் வரும் அளவிற்கு, பஸ்தாரில்  அரங்கேறும்  தாக்குதல்கள்  குறித்து வெளி உலகிற்கு தெரிய வருவதில்லை.

பஸ்தார் சுற்றுவட்டாரத்தில்  நடைபெறும் காவல்துறை மற்றும் பாதுகாப்பு குழுக்களின் மனித உரிமை மீறல்கள்,  அத்துமீறல்கள்,  பெண்கள் மீதான வன்முறை,  வயதுக்கு வராத  சிறிய வயதினரை  சிறையில் அடைத்தல், பள்ளிகளை மூடுதல், என்கவுண்டர்கள் என்று பல உண்மைகளை  எனது கட்டுரைகள் மூலம் வெளியுலகிற்கு கொண்டு வந்தேன். விளைவு.. பல   இடங்களிலிருந்தும்    மிரட்டல்கள்  பயமுறுத்தல்கள் வந்தன.  நான் அவற்றை சட்டை செய்யாமல்    அங்கே நடக்கும் நிகழ்வுகளை   விவரித்து எழுதி வருகிறேன்.    அதற்காகப்  பலமுறை காவல்துறையினர்  என்னிடம்  விசாரணை  நடத்தினார்கள்…  மிரட்டவும்   செய்தார்கள்.

கண்காணிப்பு குழு  என்று கூறிக்கொள்ளும் சிலர்,  கொலை செய்துவிடுவோம்.. என்று மிரட்டினார்கள்.  பின்னிரவு   நேரங்களில்  நான் தங்கியிருந்த வீட்டுக்கு முன் வந்து  மிரட்டல்   கோஷங்களை  எழுப்புவார்கள்.  என் வீடு நோக்கி கற்களை வீசி  திகில்  சூழலை உருவாக்குவார்கள்..  எனது காரின் கண்ணாடிகளை கல் வீசி நொறுக்கியிருக்கிறார்கள்.  நான்   இல்லாத நேரத்தில் குடியிருந்த வீட்டை  சேதப்படுத்தியுள்ளனர்.

எப்போது என்ன நடக்கும் என்று சொல்ல முடியாத மர்மச் சூழ்நிலை அந்தப் பகுதியில்  ஏற்பட்டுவிட்டது.  என்னைத் தொடரும் பிரச்னைகள்  என் மகளையும் பாதிக்கும்… அக்கம் பக்கம் இருப்பவர்களையும் பாதிக்கும் என்பதால்  வீட்டைக் காலி செய்து விட்டு    பஸ்தார் பகுதியை விட்டு வெளியேறினேன்.  நான்  அந்த இடத்தை விட்டு வந்ததும்,  அங்கு தங்கியிருந்த ஒரு சில பத்திரிகையாளர்கள், மனித உரிமைக்காக  குரல் கொடுக்கும்  வழக்கறிஞர்கள் மற்றும் ஆர்வலர்களும் அங்கிருந்து விரட்டி அடிக்கப்பட்டனர்… இதுதான் சத்தீஸ்கரில் உள்ள நிலை.

இந்நிலையில், அனைத்துலக பத்திரிகையாளர் பாதுகாப்பு குழு வழங்கியிருக்கும்  இந்த விருதை பெறுவதில் அளவிட முடியாத பெருமை, மகிழ்ச்சி  அடைகிறேன்.  என்னை அச்சுறுத்தி  பயமுறுத்தி  கலவரப்படுத்தி அந்தப்  பகுதியை விட்டு விரட்டியது  எனக்குள்  கோபத்தை ஏற்படுத்தியது. இந்த  சம்பவத்தை எனக்கு நேர்ந்த அவமானமாகக் கருதுகிறேன்.

பஸ்தார் பகுதியில் வாழும் அப்பாவி  ஆதிவாசி மக்கள்  எல்லா கோணங்களிலிருந்தும்  பன்முக  வன்முறைக்கு ஆளாகி  வருகின்றனர்.  மனித உரிமை மீறல், போலி கைதுகள் மற்றும் வற்புறுத்தி சரணடையச்  செய்தல்   அங்கே சர்வ சாதாரணமாக நிகழ்பவை.  பத்திரிகையாளர்கள் அங்குள்ள யதார்த்த  நிலையை   எழுத முடியாமல்  வெளியில் சொல்ல முடியாத கட்டாயத்தில் இருக்கின்றனர்.

எனக்குப் பக்க பலமாக நின்ற  பத்திரிகை நண்பர்கள், குடும்பத்தினர், வழக்கறிஞர்கள்,  மனித உரிமை ஆர்வலர்கள்   அனைவருக்கும்  நன்றி கடமைப்பட்டுள்ளேன்”என்கிறார் மாலினி சுப்பிரமணியம்.