மிகவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அதிமுக பொதுக் குழு வியாழக்கிழமை (டிச. 29) கூடுகிறது. பொதுச் செயலாளரை தேர்வு செய்யும் பணி மட்டுமே இந்தக் கூட்டத்தில் நடைபெறும் என்று கட்சியின் அமைப்புச் செயலாளர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை புதன்கிழமை சந்தித்த அவர் கூறியதாவது:
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகள், ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழுவை கூட்ட வேண்டும். அதன்படி, அதிமுக பொதுக் குழு கூட்டம், வியாழக்கிழமை (டிச. 29) நடைபெறுகிறது. விதிகளின் படியே பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. அதில் எந்த சர்ச்சையும் இல்லை.
புதிய பொதுச் செயலாளர்:
பொதுகுழுக் கூட்டத்தில் கட்சியின் அடுத்த பொதுச் செயலாளர் யார் என்பது குறித்து முடிவு செய்யப்படும். இதுவரை யாரும் அந்த பதவிக்கு விருப்பம் தெரிவிக்கவில்லை. மனு தாக்கலும் செய்யவில்லை. பொதுச்செயலாளர் பொறுப்பை சசிகலா ஏற்க வேண்டும் என கட்சியின் பல்வேறு அமைப்பினர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அவர் இதுவரை ஒப்புதல் தரவில்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன், சசிகலா கடந்த 33 ஆண்டுகள் ஒன்றாக இருந்து அரசியல் அனுபவம் பெற்றவர்.
அதிமுகவில் நிரந்தர பொதுச்செயலாளர் என்ற பதவி இல்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை அன்பின் காரணமாக கட்சியினர் அவ்வாறு அழைத்தனர். அதிமுக தலைமை அலுவலகத்தில் சசிகலா புஷ்பாவின் வழக்குரைஞர்களை தாக்கியது கட்சிகாரர்கள் இல்லை. அது ஒரு உணர்ச்சிபூர்வமான செயல் என்றார் பொன்னையன்.
காலையிலேயே வர அழைப்பு: சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் மாவட்ட வாரியாக வாகனங்கள் மூலமாக சென்னை வந்துள்ளனர்.
காலை 8 மணியில் இருந்து 9.30 மணிக்குள்ளாக அனைத்து உறுப்பினர்களும் கூட்டம் நடைபெறவுள்ள திருமண மண்டபத்துக்கு வர வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர். காலை 10 மணிக்கு மேல் பொதுக் குழுக் கூட்டம் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சசிகலா பங்கேற்பாரா? அதிமுகவில் தலைமைச் செயற்குழு உறுப்பினராக வி.கே.சசிகலா உள்ளார். அவர் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்புகள் குறைவு என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
சசிகலாவே அதிமுகவின் பொதுச் செயலாளராக வர வேண்டுமென பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அந்தத் தீர்மானம் அவரிடம் ஒப்படைக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன.
இந்த தீர்மானத்தின் அடிப்படையில் சசிகலா தனது முடிவை அறிவிப்பார் எனவும், பொதுச் செயலாளர் பதவியை ஏற்க ஒப்புதல் அளித்தால், எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவின்போது (ஜன.17) அவர் தனது பொறுப்பை ஏற்க வாய்ப்புகள் இருப்பதாகவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.