முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை, இலக்கிய மேம்பாட்டு சங்கத்தின் மூலம் சிறந்த படைப்புகளுக்காக தேர்வு செய்யப்பட்ட 21 சிறந்த எழுத்தாளர்களுக்கு முதல் தவணைத்தொகையாக தலா 20 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டுப் பணிக்கான தனி பணிக்குழு நிதியான 50 லட்சம் ரூபாயிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையினைக் கொண்டு ஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய ஆதிதிராவிட கிறித்துவர்களின் சிறந்த 10 படைப்புகள் மற்றும் ஆதிதிராவிடர் அல்லாதோர் ஒருவரின் சிறந்த படைப்பையும் சேர்த்து மொத்தம் 11 படைப்புகளைத் தேர்வு செய்து, அப்படைப்புகளுக்கு பரிசுத்தொகையும், பாராட்டுச் சான்றிதழும் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை, இலக்கிய மேம்பாட்டுச் சங்கத்தின் மூலம் 2018-2019-ம் ஆண்டிற்கான சிறந்த படைப்புகளுக்காக தேர்வு செய்யப்பட்ட முனைவர் அறிவரசன் (கபிலரின் செயற்கையற்ற வாழ்வும் மொழி நடையும்), எஸ். வசந்தா (திருக்குறளில் பௌத்தம்), எம்.பிரேம்குமார் (மாமன்னர் அசோகர்), முனைவர் அன்னையப்பன் (தொண்டை மண்டலப் பண்பாட்டில் திரௌபதியம்மன்), சுகிர்தராஜா (வஞ்சிக்கப்பட்டவனின் வாய்க்கரிசி), கலாராணி (பௌத்த தியானம்), மோனிகா, (பேரறிஞர் அம்பேத்கர்), திரு. மு. ரமேஷ் (சங்க இலக்கியத்தில் நிலங்கள், குடிகள், வழிபாடுகள்), பரமேஸ்வரி (தடை அதை உடை புதிய சரித்திரம் படை – உளவியல் கட்டுரை), அன்பாதவன் (இப்போதும் ஓடிக் கொண்டிருக்கும் குதிரை), இளங்கோவன் (தமிழரின் பண்பாட்டுப் பதிவுகள்) ஆகியோருக்கும்,
2019-2020-ம் ஆண்டிற்கான சிறந்த படைப்புகளுக்காக தேர்வு செய்யப்பட்ட கருப்பையன் (தடையும் ஒரு நாள் உடையும்), சண்முகசுந்தரம் (குப்பத்து ராஜாக்கள்), முனைவர் மோகன் (உயிர்த்தாள் உயிர் நீங்கினாள்), பாரதிராஜா (வெற்றி முழக்கங்கள்), முனைவர் காளிமுத்து (தமிழ் இலக்கியங்களில் மருத்துவம்), அன்டனூர் சுரா (எத்திசை செலினும்), மீனாசுந்தர் என்கிற மீனாட்சி சுந்தரம் (படைப்பு வெளியில் பதியும் பார்வைகள்), கமலம் சின்னசாமி (நலம் தரும் நாட்டு வைத்தியம்), முனைவர் ராஜா (உலக மயமாக்கல் சூழலில் நாட்டுப்புறக்கலைகள்- ஓர் பன்முகப்பார்வை – கட்டுரைத் தொகுப்பு), மு.வெ. ஆடலரசு (இசை மொழியும், ஆதி இனமும்) ஆகிய 21 சிறந்த எழுத்தாளர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் முதல் தவணைத்தொகையாக தலா 20 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தலைமைச் செயலாளர் இறையன்பு, முதன்மைச் செயலாளர் டாக்டர் மணிவாசன், ஆணையர் மதுமதி கலந்து கொண்டனர்.