மொத்தம் உள்ள 398 மாவட்டங்களில் 250 மாவட்டங்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக, தலிபான் அதிகாரிகள் கூறி உள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைகள் வெளியேறி வரும் நிலையில், மீண்டும் தலிபான்களின் ஆதிக்கம் மேலோங்கி உள்ளது. நாடு முழுவதும் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றனர். அரசுப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை தொடர்ந்து கைப்பற்றி வரும் தலிபான்கள், ஆப்கானிஸ்தானை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் வடமேற்கு பகுதியில் தஜிகிஸ்தான் நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள படாக்ஸ்கான் மற்றும் கந்தகார் மாகாணங்களில் உள்ள நகரங்களை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். தாக்குதல்களை தடுக்க முடியாமல் ஆப்கானிஸ்தான் படை வீரர்கள் தலிபான்களிடம் சரணடைந்து வருகின்றனர். ராணுவத்தின் ஒரு குழுவினர் தஜிகிஸ்தான் நாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளனர்.
கடந்த மூன்று நாட்களில் மட்டும் 10 மாவட்டங்கள் தலிபான் வசம் சென்றுள்ளன. இதில் 8 மாவட்டங்களை சண்டை போடாமலேயே தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். ஆப்கானிஸ்தானின் 85 சதவீத பகுதிகளை தங்கள் வசம் கொண்டு வந்துள்ளதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். மொத்தம் உள்ள 398 மாவட்டங்களில் 250 மாவட்டங்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக, தலிபான் அதிகாரிகள் மாஸ்கோவில் செய்தியாளர்களிடம் கூறி உள்ளனர்.
அதன்பின்னர் துர்க்மெனிஸ்தானுடனான ஆப்கானிஸ்தானின் முக்கிய எல்லைப் பகுதியை கைப்பற்றியதாகவும் தலிபான் அமைப்பு இன்று தெரிவித்துள்ளது. முக்கியமான டோர்கண்டி எல்லை துறைமுகம் முழுமையாக கைப்பற்றப்பட்டதாக தலிபான் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
ஆனால், துறைமுகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் தற்காலிகமாக வேறு இடத்திற்கு சென்றுவிட்டதாகவும், எல்லை பகுதியை மீண்டும் கைப்பற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.