கடந்த 4 வாரங்களில் மட்டும் லம்படா வகை வைரஸ் 30-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ளது. தென்அமெரிக்க நாடான பெருவில் லம்படா வகை கொரோனா வைரஸ் முதல் முறையாக கண்டறியப்பட்டது.உலகம் முழுவதும் கடந்த ஆண்டு முதல் கொரோனா வைரஸ் பரவி பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. சீனாவில் பரவத்தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் பின்னர் படிப்படியாக உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது.
முதல் அலை, 2-வது அலை, 3-வது அலை என தொடர்ச்சியாக ஒவ்வொரு நாடுகளிலும் பொதுமக்களை கொரோனா வைரஸ் தாக்கி வருகிறது. உலகம் முழுவதும் இதுவரை 18 கோடியே 60 லட்சத்து 4 ஆயிரத்து 716 பேரை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது.
அவர்களில் 40 லட்சத்து 20 ஆயிரத்து 491 பேர் கொரோனா பாதிப்பால் பலியாகி உள்ளனர். 17 கோடியே 1 லட்சத்து 97 ஆயிரத்து 444 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர். 1 கோடியே 17 லட்சத்து 86 ஆயிரத்து 752 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் 77 ஆயிரத்து 869 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா பரவத்தொடங்கி 1½ ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அதன் தாக்கம் இன்னும் குறையாமலேயே உள்ளது. கொரோனா வைரஸ் தன்னை தற்காத்துக் கொள்ள அவ்வப்போது உருமாறி வருகிறது. கொரோனா முதல் அலையின் போது ஆல்பா என்ற கொரோனா வைரஸ் காணப்பட்டது.
அதன்பிறகு மீண்டும் உருமாறிய கொரோனா டெல்டா பிளஸ் என்று அழைக்கப்பட்டது. அது டெல்டா வைரசை விட வேகமாக பரவி அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டது. இந்தியாவிலும் சிலர் டெல்டா பிளஸ் வைரசால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் மீண்டும் உருமாறி ‘லம்படா’ என்ற புதிய வைரசாக உருவெடுத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் டெல்டா வைரசை விட அதிவேகமாக பரவி அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் அபாயம் கொண்டது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
தற்போது இங்கிலாந்து, பெரு உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் லம்படா வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதுதொடர்பாக மலேசிய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
இங்கிலாந்தில் தற்போது ஆதிக்கம் செலுத்தி வரும் டெல்டா வகை கொரோனாவை விட புதிதாக பரவி வரும் லம்படா வகை கொரோனா வைரஸ் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடியது. அந்த புதிய வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது.
கடந்த 4 வாரங்களில் மட்டும் லம்படா வகை வைரஸ் 30-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ளது. தென்அமெரிக்க நாடான பெருவில் லம்படா வகை கொரோனா வைரஸ் முதல் முறையாக கண்டறியப்பட்டது. அந்த நாட்டில் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உயிரிழப்பு விகிதம் உலகிலேயே மிகவும் அதிகம்.
இங்கிலாந்திலும் லம்படா வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை அங்கு 6 பேருக்கு லம்படா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பெரு நாட்டில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரில் 82 சதவீதம் பேரிடம் லம்படா வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக பான் அமெரிக்க சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் சிலி நாட்டில் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 31 சதவீத புதிய கொரோனா நோயாளிகளிடம் லம்படா வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.