ஆர்ப்பாட்டங்கள் மூலம் அரசைக் கவிழ்க்கவே முடியாது! – பஸில்

275 0

ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசைக் கவிழ்க்கவே முடியாது என்பதை எதிரணியினரிடம் சொல்லிவைக்க விரும்புகின்றேன்.

என்று நிதி அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளருமான பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.

பிரயோசனமற்ற இந்த ஆர்ப்பாட்டங்களைக்  கைவிட்டுவிட்டு நாட்டினதும் மக்களினதும் நலன் சார்ந்த அரசின் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் எதிரணியினரிடம் கேட்டுக்கொள்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

நான் நாடாளுமன்ற உறுப்பினராக – அமைச்சராகப் பதவியேற்றவுடன் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை  எதிரணியினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

குறிப்பிட்ட ஒரு சிலரைக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசைக் கவிழ்க்கவே முடியாது.

நாட்டு மக்கள் மனதில் ‘தாமரை மொட்டு’ சின்னமே இருக்கின்றது. இந்த ‘மொட்டு’க்கு வாக்களித்துத்தான் நாட்டின் பலமிக்க ஜனாதிபதியையும், மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்துடனான அரசையும் மக்கள் தெரிவு செய்தார்கள்.

எதிரணியினரின் இந்த ஆர்ப்பாட்டங்கள், நாட்டு மக்கள் ஜனாதிபதிக்கும் அரசுக்கும் வழங்கிய அமோக ஆணைக்குத் தூசு.

எனவே, பிரயோசனமற்ற இந்த ஆர்ப்பாட்டங்களைக்  கைவிட்டுவிட்டு நாட்டினதும் மக்களினதும் நலன் சார்ந்த அரசின் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு எதிரணியினரிடம் கேட்டுக்கொள்கின்றேன் – என்றார்.