முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தடுப்பூசி செலுத்தும் நிலையங்களிற்கு அதிக தடுப்பூசிகள்

189 0

முப்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள தடுப்பூசி மையங்களிற்குஅதிகளவு தடுப்பூசிகளை சுகாதார அதிகாரிகள் வழங்குவதன் காரணமாக சுகாதார துறையினரின் மேற்பார்வையில் உள்ள தடுப்பூசி மையங்களிற்கான தடுப்பூசிகள் குறைக்கப்பட்டுள்ளன என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளிற்கு சுகாதார துறையினர் மாத்திரம் பொறுப்பாகயிருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

தொற்றுநோய் பரவும் வேளைகளில் முதலில் மனதில் தோன்றுபவை மருத்துவமனைகளே என தெரிவித்துள்ள அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தை சேர்ந்த வைத்தியர் ஹன்சமால் வீரசுரிய தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கையை முற்றாக சுகாதார தரப்பினரிடம் வழங்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

முப்படையினரினால் நிர்வகிக்கப்படும் தடுப்பூசிமையங்கள் காரணமாகவே சுகாதாரதுறையினருக்கு வழங்கப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது என தெரிவித்துள்ள அவர் மேல்மாகாணத்தில் 133 கொவிட் தடுப்பூசி செலுத்தும் நிலையங்கள் காணப்படுகின்ற போதிலும் அந்த தடுப்பூசி செலுத்தும் நிலையங்களிற்கு போதிய தடுப்பூசிகள் வழங்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசி வழங்குவது என்பது சுகாதார தரப்பினர் முன்னெடுக்கும் நடவடிக்கை என்பதால் இது தொடர்பான அனைத்து பொறுப்பினையும் சுகாதார தரப்பினரிடம் வழங்கவேண்டும்,இராணுவத்தினர் உட்பட ஏனைய தரப்பினர் இதில் வழங்கும் உதவியை நாங்கள் பாராட்டும் அதேவேளை தடுப்பூசிகளை செலுத்தும் நடவடிக்கைகளே சுகாதார துறையினரே முன்னெடுக்கவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.