சமீபத்தில் பா.ஜனதா கட்சியால் அ.தி.மு.க. தோல்வியை தழுவியதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கருத்து வெளியிட்டார். இதற்கு பா.ஜ.க.வில் எதிர்ப்பு கிளம்பியது.
தமிழக சட்டசபைக்கு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி வாய்ப்பை இழந்து 3-வது முறையாக ஆட்சி அமைக்க முடியாமல் போனது.
என்றாலும் 66 இடங்களை கைப்பற்றி அ.தி.மு.க. தனது வலிமையை நிரூபித்தது. ஜெயலலிதா இல்லாத நிலையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க. பெற்ற இந்த வெற்றியை முக்கியத்துவமாக அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள்.
10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சிக்கு வந்துள்ள தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் தேர்தலில் 3 சதவீத வாக்குகளே வித்தியாசம் இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே அ.தி.மு.க. தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் செயல்படும் என்று தொண்டர்கள் கருதுகிறார்கள்.
ஆனால் அரசியலை விட்டு ஒதுங்குவதாக கூறியிருந்த சசிகலா மூலம் மீண்டும் அ.தி.மு.க.வில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் தினமும் போனில் பேசி வரும் சசிகலா விரைவில் ஜெயலலிதா சமாதிக்கு சென்று விட்டு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அ.தி.மு.க.வினரை சந்திக்க போவதாக கூறி உள்ளார்.
இந்த சலசலப்புக்கு இடையே இன்னும் சில மாதங்களில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலும் நடைபெற உள்ளது. அ.தி.மு.க.வை அந்த உள்ளாட்சி தேர்தலுக்கு தயார்படுத்த வேண்டிய மிக முக்கிய பணி எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் வந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் அ.தி.மு.க.வில் உட்கட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டிய நிர்பந்தமும் அவர்களுக்கு இருக்கிறது. இப்படி பல்வேறு விஷயங்களில் மிக முக்கிய முடிவுகளை அ.தி.மு.க. மேலிட தலைவர்கள் எடுக்க வேண்டிய அவசியம் உருவாகி இருக்கிறது.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் படி இன்று மாலை அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் சென்னைக்கு வந்துள்ளனர்.
மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை வகிக்க உள்ளனர். கூட்டத்தில் பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இந்த கூட்டத்தில் அமைப்புச் செயலாளர்கள் உள்பட தலைமை கழக நிர்வாகிகளும் பங்கேற்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனால் 73 மாவட்டச் செயலாளர்களுடன் தலைமைக்கழக நிர்வாகிகள் 70 பேர் பங்கேற்கிறார்கள்.
அந்த வகையில் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் மற்றும் பொன்னையன், வேலுமணி, தங்கமணி, மனோஜ்பாண்டியன் உள்பட முக்கிய நிர்வாகிகளும் இதில் கலந்து கொள்கிறார்கள்.
மாவட்டச் செயலாளர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு அதற்கேற்ப கூட்டத்தில் முடிவுகள் செய்யப்படும் என்று தெரிகிறது.
அ.தி.மு.க. உட்கட்சி தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையத்திடம் அ.தி.மு.க. சார்பில் கால அவகாசம் கேட்கப்பட்டு உள்ளது. உட்கட்சி தேர்தலை எப்போது, எவ்வாறு நடத்துவது என்று இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.
அதேபோல உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க.வை எவ்வாறு தயார்படுத்துவது என்றும் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றுவதற்கு இப்போதே குழுக்கள் அமைப்பது தொடர்பாகவும் இன்றைய கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.
சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க. கட்சிகள் முக்கிய அங்கம் வகித்து இருந்தன. உள்ளாட்சி தேர்தலிலும் இந்த கூட்டணியை தொடர்வது தொடர்பாக இன்று நடைபெறும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்படுகிறது.
சமீபத்தில் பா.ஜனதா கட்சியால் அ.தி.மு.க. தோல்வியை தழுவியதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கருத்து வெளியிட்டார். இதற்கு பா.ஜ.க.வில் எதிர்ப்பு கிளம்பியது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி தொடரும் என்று எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் அறிவித்தனர். இதன்மூலம் உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி நீடிக்கும் என்று உறுதியாகி உள்ளது.
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதாவை சேர்த்ததால்தான் தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகள் கணிசமான அளவுக்கு கிடைக்கவில்லை என்று அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒரு சாரார்களிடம் அதிருப்தி நிலவுகிறது. இது தொடர்பாகவும் இன்று நடக்கும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் கருத்து வேறுபாடுகள் இருப்பதாக தோற்றம் நிலவுகிறது. இருவரும் தனித்தனியாக அறிக்கை வெளியிடுவதால் இந்த பிரச்சனை பரபரப்பாக பேசப்படுகிறது. இதற்கும் இன்று நடக்கும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று தெரிகிறது.
உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசிப்பதற்காகவே மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடப்பதாக அ.தி.மு.க. தலைவர்கள் தெரிவித்தாலும் சசிகலா விவகாரம்தான் மிக முக்கியமாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. அ.தி.மு.க.வில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் சசிகலாவின் செயல்பாடுகள் அமைந்திருப்பதாக மூத்த தலைவர்கள் கருதுகிறார்கள்.
சசிகலா விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டால் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே சசிகலாவின் ரகசிய திட்டங்களையும், புதிய வியூகங்களையும் முறியடிக்கும் வகையில் இன்று நடக்கும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் தி.மு.க.வுக்கு சென்ற வண்ணம் உள்ளதால் அதை தடுக்க கட்சி நிர்வாகிகளுக்கு என்ன உத்தரவாதம் அளிக்கலாம் என்பது பற்றியும் விரிவாக ஆலோசிக்கப்படுகிறது.
மேலும் முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் மீது தி.மு.க. அரசு வழக்கு தொடர்ந்து வருவதால் அதை எதிர்கொள்வது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கிறார்கள்.
உட்கட்சி தேர்தல், உள்ளாட்சி தேர்தல், சசிகலா விவகாரம், கூட்டணி நிலைப்பாடு, தி.மு.க.வால் ஏற்படும் நெருக்கடி உள்பட பல விசயங்களில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் முடிவுகள் எடுக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். முடிவுகள் எடுப்பதில் தாமதம் செய்தால் அவை வேறு விதமான பின் விளைவுகளை ஏற்படுத்தி விடக்கூடும் என்று அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் எச்சரித்து உள்ளனர்.
எனவே இன்று நடக்கும் மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம். இதனால் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.