கடந்த சில மாதங்களுள், வடக்கில் வனப்பகுதியிலும் கிராமப் பகுதிகளிலும் 35 காட்டு யானைகள் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட கால்நடை வைத்திய அதிகாரி பீ.கிரிதரனை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
வடக்கில் தொடருந்தில் மோதி கடந்த சில மாதங்களில் 7 யானைகள் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமாகாணத்தில் மொத்தமாக 100க்கும் 150க்கும் இடையிலான யானைகளே உள்ளன.
அவற்றில் அதிகளவான யானைகள் கிளிநொச்சி மாவட்ட வனப்பகுதிகளில் வசிக்கின்றன.
குறித்த யானைகள் உணவைத் தேடி ஏ.9 வீதிக்கு வரும் நிலைமை தற்போது அதிகரித்துள்ளது.
இதனால் ஏற்படும் விபத்துக்களும் யானைகளின் அழிவுக்கு காரணமாக அமைகின்றன.
எனவே யானைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், இன்னும் 10 வருடங்களில் வடக்கில் உள்ள யானைகள் முழுமையாக அழிந்துவிடும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.