அறுவை சிகிச்சைக்குப்பின் போப் ஆண்டவருக்கு காய்ச்சல்

194 0

போப் பிரான்சிஸ் விரைவில் உடல் நலம் பெற்று திரும்புவதற்காக உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

குடல் பாதிப்புக்காக இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள கெமல்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த போப் ஆண்டவர் பிரான்சிசுக்கு கடந்த 4-ந்தேதி அறுவை சிகிச்சை நடந்தது.

பெருங்குடல் சுருக்கத்தால் அவதிப்பட்ட அவருக்கு, பெருங்குடலின் இடதுபாகம் அறுவை சிகிச்சை செய்து நீக்கப்பட்டது. இந்த அறுவை சிகிச்சைக்குப்பின் வேகமாக அவர் குணமடைந்து வருகிறார்.

எனினும் அறுவை சிகிச்சை நடந்து 3 நாட்களுக்குப்பின், அதாவது நேற்று முன்தினம் மாலையில் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. எனவே அவரது உடல் நிலையை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

அதேநேரம் நேற்று காலையில் அவருக்கு வழக்கமான பரிசோதனைகளுடன், மார்பு மற்றும் வயிற்றுப்பகுதியில் ஸ்கேன் எடுக்கப்பட்டது. இதில் எந்த பிரச்சினையும் இல்லை என கண்டறியப்பட்டு உள்ளது.

போப் பிரான்சிசால் சாப்பிடவும், துணையின்றி நடக்கவும் முடிவதாகவும் வாடிகன் கூறியுள்ளது. ஆஸ்பத்திரியில் அவ்வப்போது நடைபயிற்சியில் ஈடுபட்டுள்ள அவர், அங்குள்ள இளம் புற்றுநோயாளிகளுக்கு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டதாகவும் வாடிகன் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

போப் பிரான்சிஸ் விரைவில் உடல் நலம் பெற்று திரும்புவதற்காக உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.