செல்வபுரத்தில் அட்டூழியத்தில் ஈடுபட்டோர் யாழில் கைது

270 0
முல்லைத்தீவு – செல்வபுரத்தில் வீடொன்றுக்குள் புகுந்து ஒருவரை வாளால் வெட்டியும்  காரை எரியூட்டியும் அட்டூழியத்தில் ஈடுபட்ட 6 பேர், யாழ்ப்பாணத்தில் வைத்து, நேற்று (07)  கைது செய்யப்பட்டுள்ளனர்.

நவாலியைச் சேர்ந்த மூவரும் புத்தூரைச் சேர்ந்த மூவருமே இவ்வாறு, கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுவிஸில் இருக்கும் ஆவா குழுவைச் சேர்ந்த ஒருவர், பணம் அனுப்பி இந்த தாக்குதலை நடத்துமாறு வழிநடத்தியதாக, சந்தேக நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது என்று, பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 27ஆம் திகதியன்று, கள்ளப்பாட்டுப் பகுதியில் வீடு ஒன்றுக்குள் நுழைந்த கும்பல் ஒன்று, வீட்டில் இருந்தவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியதுடன், வாகனங்கள் இரண்டு மீது தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றிருந்தது.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத்தடுப்பு பொலிஸாரால் நவாலியில் வைத்து நேற்று (07) ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் ஐவர் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்கள் ஆறு பேரும் சம்பவம் தொடர்பில் ஒப்புக்கொண்டனர்.

சந்தேக நபர்களிடமிருந்து மூன்று மோட்டார் சைக்கிள்கள், வாள்கள் என்பன கைப்பற்றப்பட்டன.

சந்தேக நபர்கள் 6 பேரும், முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.