கடந்த ஒரு வாரத்தில் கோவை, சேலம், திருப்பூர், செங்கல்பட்டு, ஈரோடு, தஞ்சாவூர், திருச்சி, திருவண்ணாமலை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாகவே பதிவாகி இருந்தது.தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே குறைந்து வந்தது.
ஊரடங்கு காரணமாக நோய் தொற்று குறையத் தொடங்கியது. மே மாத இறுதிவரையில் தினமும் 30 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், படிப்படியாக கொரோனாவின் தாக்கம் குறைந்தது.
கடந்த மாதத்தை போலவே இந்த மாதமும் நோயின் தாக்கம் குறைவாகவே இருந்து வந்தது. இருப்பினும் அவ்வப்போது சில மாவட்டங்களில் முந்தைய நாள் ஏற்பட்ட பாதிப்பை விட தினசரி தொற்று அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் நேற்று முன்தினம் இருந்ததை விட நேற்று 11 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 37 ஆக இருந்த தினசரி பாதிப்பு, நேற்று 49 ஆக அதிகரித்துள்ளது. கடலூரில் 83 ஆக இருந்த எண்ணிக்கை 89 ஆக உயர்ந்துள்ளது.
காஞ்சிபுரத்தில் நேற்று முன்தினம் 49 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று 51 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.
மயிலாடுதுறையில் 31 ஆக இருந்த கொரோனா பாதிப்பு 34 ஆகவும், நாகப்பட்டினத்தில் 27 ஆக இருந்த நோய் தொற்று 36 ஆகவும், நீலகிரியில் 105 ஆக இருந்த பாதிப்பு 110 ஆகவும் அதிகரித்துள்ளது.
திருப்பத்தூரில் நேற்று முன்தினம் 20 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று 24 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. திருவள்ளூரில் 89 ஆக இருந்த பாதிப்பு 92 ஆகவும், திருவாரூரில் 39 ஆக இருந்த பாதிப்பு 46 ஆகவும் அதிகரித்துள்ளது.
வேலூரில் நேற்று முன்தினம் 45 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த எண்ணிக்கை 50 ஆக அதிகரித்தது. விழுப்புரத்தில் 58 ஆக இருந்த நோய் தொற்று 64 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் கோவை, சேலம், திருப்பூர், செங்கல்பட்டு, ஈரோடு, தஞ்சாவூர், திருச்சி, திருவண்ணாமலை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாகவே பதிவாகி இருந்தது.
11 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 69 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதன் காரணமாக நேற்று முன்தினம் (6-ந் தேதி) ஏற்பட்ட தினசரி பாதிப்பை விட நேற்று (7-ந் தேதி) தினசரி தொற்று அதிகரித்துள்ளது.
6-ந் தேதியன்று 3,479 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டு இருந்தது. நேற்று இந்த எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. நேற்றைய தினசரி பாதிப்பு 3,704 ஆக பதிவாகி உள்ளது. கடந்த 5-ந் தேதி தினசரி பாதிப்பு 3,715 ஆக இருந்தது.
இதன் மூலம் நேற்று ஒரே நாளில் 225 பேருக்கு கூடுதலாக நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.
பொது மக்கள் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காமல் உள்ளனர். முக கவசம் அணியாமல் வெளியில் சுற்றுவது, சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூடுவது ஆகியவையும் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாகவே நோய் தொற்று திடீரென அதிகரித்து இருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
அதே நேரத்தில் சென்னையில் நோய் தொற்று அதிகரிக்காமல் குறைந்து கொண்டே இருப்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்று கடந்த மே மாதம் சென்னையில் உச்சத்தில் இருந்தது. தினசரி பாதிப்பு 7 ஆயிரத்துக்கும் மேல் பதிவானது. ஆனால் மே மாத இறுதியில் இருந்து படிப்படியாக நோய் தொற்று குறையத் தொடங்கியது.
இது கடந்த மாதத்தில் இருந்து வேகமாக சரிந்துள்ளது. அந்த வகையில் தினசரி பாதிப்பு நேற்று 200-க்கும் கீழ் சென்றுள்ளது. நேற்று முன்தினம் 209 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று 196 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டு இருக்கிறது.
கொரோனாவின் தாக்கம் இப்படி படிப்படியாக குறைய தொடங்கியதால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
சென்னையில் கடந்த சில நாட்களாகவே குணமடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் தற்போது சென்னையில் 1,654 பேர் மட்டுமே சிகிச்சையில் இருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் 34 ஆயிரத்து 76 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.