மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்ற எல்.முருகனுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து

225 0

தமிழகத்திற்கு வேண்டிய அனைத்து நலன்களையும் மத்திய அரசிடம் கேட்டுப் பெற்று தமிழகத்தை முன்னேற்ற வேண்டும் என்று எல்.முருகனை கேட்டுக்கொள்வதாகவும் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி மந்திரிசபை, 2-வது முறையாக கடந்த 2019-ம் ஆண்டு மே 30-ந் தேதி பதவி ஏற்றது. இந்த நிலையில் நேற்று மாலை மத்திய மந்திரிசபை விரிவாக்கத்துடன் மாற்றம் செய்யப்பட்டது. அதற்கான 43 புதிய மத்திய மந்திரிகளின் பட்டியலில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகனின் பெயர் இடம்பெற்றிருந்தது.
அதனை தொடர்ந்து நேற்று மாலை 6 மணிக்கு குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற புதிய மத்திய மந்திரிகளின் பதவியேற்பு விழாவில், மத்திய இணையமைச்சராக தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்துவைத்தார்.
மத்திய இணையமைச்சராக பதவியேற்றுள்ள எல்.முருகனுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் எல்.முருகனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், மத்திய மந்திரியாக பதவியேற்ற தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுக்கு தே.மு.தி.க. சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும், தமிழகத்திற்கு வேண்டிய அனைத்து நலன்களையும் மத்திய அரசிடம் கேட்டுப் பெற்று தமிழகத்தை முன்னேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாகவும் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.