பாஜக அரசின் கொடுங்கோல் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக கொண்டு வரப்பட்டிருக்கிற சட்டமான ஒளிப்பதிவு சட்டத் திருத்தத்தை எதிர்த்து கருத்து தெரிவித்த சூர்யா அவர்களை அச்சுறுத்தும் நோக்கோடு செயல்பட்டு வரும் பாஜகவின் செயல்பாடுகள் கண்டனத்திற்குரியது.
தம்பி சூர்யாவை அச்சுறுத்தும் நோக்கோடு செயல்பட்டு வரும் பாஜகவின் செயல்பாடுகள் கண்டனத்திற்குரியது என்றும், நடிகர் சூர்யாவை விவாதத்திற்கு அழைக்கும் பாஜகவினர் என்னோடு விவாதிக்க தயாரா? என்றும் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அரசியலமைப்பு சட்டம் வலியுறுத்தும் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராகவும் இந்நாடு கொண்டிருக்கும் பன்மைத்துவ பண்பிற்கும் ஒற்றை மயமாக்கலையும் அதிகாரக் குவிப்பையும் செய்து வரும் பாஜக அரசின் கொடுங்கோல் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக கொண்டு வரப்பட்டிருக்கிற சட்டமான ஒளிப்பதிவு சட்டத் திருத்தத்தை எதிர்த்து கருத்து தெரிவித்த அன்பு தம்பி சூர்யா அவர்களை அச்சுறுத்தும் நோக்கோடு செயல்பட்டு வரும் பாஜகவின் செயல்பாடுகள் கண்டனத்திற்குரியது.
திரைக்கலைஞர்கள் ஒரு சமூகத்தின் ஒரு அங்கம் தான். அவர்களும் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் குரல் எழுப்ப வேண்டும் எனும் தார்மீக பொறுப்பு உணர்ந்து அநீதிக்கு எதிராக தனது கருத்துக்களை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வரும் தம்பி சூர்யாவின் நெஞ்சுரமும் துணிவும் போற்றுதற்குரியது. கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட இச்சட்டத்தை எதிர்க்க வேண்டியதன் அவசியத்தையும் அதன் உள்ளிருக்கும் பெரும் ஆபத்தையும் உள்ள அரசியலையும் உணர்ந்து ஆழ்மனக்குமுறலை வெளிப்படுத்தி இருப்பது மிக நேர்மையானது. அதனை உளப்பூர்வமாக வரவேற்கிறேன். அவரது நிலைப்பாட்டுக்கு நாம் தமிழர் கட்சி உறுதுணையாக நிற்கும் என உறுதியளிக்கிறேன்.
அடக்குமுறை ஏவுவதும் தனிநபர் தாக்குதல் தொடுப்பதும் ஆபாசமாக பேசுவதும் சமூக விரோதி தேச துரோகி என முத்திரை குத்தி ஒதுக்குவதும் என சனநாயக விரோதத்தை அரங்கேற்றி வரும் பாஜக, தம்பி சூர்யாவை ஒளிப்பதிவு சட்டத் திருத்தம் குறித்து விவாதிக்க அழைப்பது கேலிக்கூத்தானது.
சூர்யாவை விவாதத்திற்கு அழைக்கும் பாஜகவின் தலைவர் பெருமக்களை ஒரே மேடையில் விவாதிக்க நானும் அழைக்கிறேன். பாஜகவின் ஆட்சி முறை குறித்தும் அவர்கள் முன்வைத்த திட்டங்கள் குறித்தும் கொண்டு வருகிற சட்டங்கள் குறித்தும் பொருளாதார கொள்கைகள் குறித்தும் தற்போது கொண்டுவரப்பட்டு இருக்கிற ஒளிப்பதிவு சட்டத் திருத்தம் குறித்தும் வாதிட தர்க்கரீதியான கருத்தியல் சண்டைக்கு அறைகூவல் விடுக்கிறேன். என்னோடும் என் தம்பிகளோடும் விவாதிக்க தயாரா? எங்களை எதிர்த்து பேச துளியாவது துணிவு இருக்கிறதா? எங்களை தாண்டிதான் தம்பி சூர்யாவை நெருங்க முடியும்.
ஒளிப்பதிவு சட்டத் திருத்தத்திற்கு எதிராகக் கருத்துத் தெரிவித்ததற்காக, தம்பி சூர்யாவை தனிநபரென நினைத்து பாஜகவினர் அச்சுறுத்தவோ, மிரட்டவோ முனைந்தால் எதிர்விளைவுகள் மோசமாக இருக்கும் என்று எச்சரிக்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.