ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் என மூவரும் மாறுபட்ட நிலைப்பாட்டில் உள்ளனர். உடனடியாக மூவரும் ஒருமித்த தீர்மானத்திற்கு வராவிடின் சர்வதேச நாடுகளிடையே இலங்கை தொடர்பில் குழப்ப நிலையை ஏற்படும்.
இவ்வாறு மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலையத்தின் பணிப்பாளரும் நல்லிணக்கச் செயலணியின் செயலாளருமான கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து எச்சரிக்கை விடுத்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஐ.நா. தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் செயற்பாட்டில் நாங்கள் சர்வதேசத்தின் பங்களிப்பை இன்னமும் நிராகரிக்கவில்லை. ஜனாதிபதி மற்றும் பிரதமர் தெரிவிப்பது அவர்களின் தனிப்பட்ட கருத்துகளாகும் என்று நேற்றுமுன்தினம் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் சிவில் அமைப்புகள் மற்றும் அரசியல் நிபுணர்கள் எவ்வாறான நிலைப்பாட்டில் உள்ளனர் என்று பாக்கியசோதியிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “வெளிவிவகார அமைச்சர் கூறியது போல் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கருத்துகள் தனிப்பட்டவையாகும். ஆனால், இந்த விடயத்தில் அரசு இதுவரை கவனம் செலுத்தவில்லை என்பது மட்டும் தெளிவாக விளங்குகின்றது. கூடிய விரைவில் ஐ.நா. தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் மூவரும் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வரவேண்டும்.
இல்லாவிடின் திரிவுபடுத்தப்பட்ட கருத்துகள் சர்வதேச நாடுகளிடையே இலங்கை தொடர்பில் பாரிய குழப்ப நிலையைத் தோற்றுவிக்கும். கட்டாயம் இலங்கை அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியே ஆகவேண்டும். இதில் மாற்றங்கள் எதனையும் மேற்கொள்ள முடியாது. அரசு இந்த விடயத்தில் மெத்தனப்போக்கை விடுத்து நடைமுறைப் போக்கைக் கையாள உடனடியாக குதிக்காவிடின் பிரச்சினைகள்தான் மேலும் வலுப்பெறும்” – என்றார்.