ரயில்வே திணைக்களத்திற்கு இவ்வருடம் ஐந்து மில்லியன் ரூபாவுக்கும் அதிக இலாபம் கிடைத்துள்ளது. ரயில்வே விதிகளை மீறியமை தொடர்பில் வழக்கு தாக்கல் செய்தல் மற்றும் அபராதம் விதித்தல் மூலம் 2016 ஆம் ஆண்டில், ரயில்வே திணைக்களத்திற்கு ஐந்து மில்லியன் ரூபாவுக்கும் அதிக இலாபம் கிடைத்துள்ளது.
அனுமதிச் சீட்டு இன்றி ரயிலில் பயணித்த 1295 பேருக்கு எதிராக இவ் வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, ரயில்வே திணைக்கள பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
இதனால் பெறப்பட்டுள்ள வருமானம் 31 இலட்சத்து 36 ஆயிரத்து 298 ரூபா என்று ரயில்வே திணைக்கள பாதுகாப்பு அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
குறைந்த வகுப்பு ஆசனங்களுக்கான அனுமதிச் சீட்டை பெற்று, உயர் வகுப்பில் பயணித்த குற்றச்சாட்டில் 346 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, ரயில் கடவைகளில் விதிகளை மீறியதாக கூறப்பட்டு 35 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, ரயிலில் யாசகம் கோரியமை குறித்து 35 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ரயில் மிதி பலகையில் இருந்து பயணித்தமை தொடர்பில் 10 பேருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ரயில்களில் சட்டவிரோதமாக வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்ட 35 பேருக்கு எதிராகவும் இவ்வருடம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, ரயில்வே திணைக்கள பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.